அடங்க மறு: நிட்டோ ATP (ஏடிபி) போட்டி - ரோஜர் ஃபெடரின் சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்!

Novak Djokovic
Novak Djokovic
Published on

நவம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை நடந்த நிட்டோ ஏடிபி இறுதிப் போட்டியின், ஆடர்வர்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் போட்டியில், 36 வயது செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னரை 6-3, 6-3, என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்து ஆடவர் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ஆனார். இது ஜோகோவிச்சின் தொடர் 2வது வெற்றி மற்றும் ஏடிபி இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சின் 7வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் அவர் ரோஜர் ஃபெடரரின் 6 முறை வெற்றி பெற்ற சாதனையையும் முறியடித்துள்ளார்.

2023 நிட்டோ ஏடிபி பைனல்ஸ் - ஒரு கண்ணோட்டம்

2023 நிட்டோ ஏடிபி பைனல்ஸ் நவம்பர் 12 -19 வரை இத்தாலியில் உள்ள டுரின் நகரத்தில் நடைபெற்றது. ஏடிபி இறுதிப் போட்டிகள் என்பது ஆண்கள் டென்னிஸ் சீசன் முடிவின் இறுதிப் போட்டியாகும். இதில், ஒவ்வொரு ஆண்டும் தகுதி பெற்ற முதல் எட்டு ஒற்றையர் வீரர்கள் மற்றும் இரட்டையர் அணிகள் சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிடுவார்கள்.

எட்டு வீரர்கள்/ இரட்டையர் குழுக்கள், நான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு பேர் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

சனிக்கிழமை, நவம்பர் 18 அன்று நடந்த முதல் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், ஜானிக் சின்னர், டேனியல் மெட்வெடேவை 6-3,6-7, 6-1, என்ற செட் கணக்கில் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல இரண்டாவது அரையிறுதியில் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸை 6-3, 6-2, என்ற நேர் செட்களில் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

அனல் பறந்த இறுதி மோதல்

செர்பிய வீரர் ஜோகோவிச் அவரது முதல் ஏழு சர்வீஸ் கேம்களில் இரண்டு புள்ளிகளை மட்டுமே இழந்து முன்னேறினார். பின்னர் தொடர்ந்து 1 மணிநேரம், 43 நிமிடங்கள் திறமையாக விளையாடி, இத்தாலி வீரருக்கு எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்காமல் இறுதியில் வெற்றி வாகை சூடினார். இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் தன்னை தோற்கடித்த சின்னருக்கு தக்க பதிலடி கொடுத்தார் ஜோகோவிச்.

இரண்டாவது செட்டை 3-3 என சமன் செய்யும் வாய்ப்பிற்காக சின்னர் 16 நிமிடங்கள், 8 டியூஸ்கள் வரை சென்று போராடினார். இருந்தும் அவரால் அந்த செட்டை ப்ரேக் செய்ய முடியவில்லை. இதன் மூலம் ஃபைனல்ஸை வெல்லும் வாய்ப்பை இழந்தார் ஜானிக் சின்னர். இருந்தும் 22 வயது சின்னர், ஏடிபி இறுதிப் போட்டியில் விளையாடிய முதல் இத்தாலியர் என்ற சாதனையை நேற்று படைத்தார்.

"நான் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். எதிராளிகள் வெற்றியை என்னிடம் ஒப்படைக்க நான் காத்திருக்கக்கூடாது. அதைத்தான் நான் செய்தேன். ஜானிக்கிற்கு எதிரான குழு கட்டத்தில் நான் விளையாடியதை விட வித்தியாசமான யுக்தியை நான் இப்போட்டியில் பயன்படுத்தினேன், ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான வாரமாக எனக்கு அமைந்தது,” என்று ஜோகோவிச் கூறினார்.

2008, 2010, 2011, 2014, 2015, 2022, மற்றும், 2023ல் கோப்பைகளுடன், நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டைட்டிலை ஜோகோவிச் தற்போது ஏழு முறை வென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் நேருக்கு நேர் மோதும், ரொனால்டோ - மெஸ்ஸி!
Novak Djokovic

பெப்பர்ஸ்டோன் ஏடிபி தரவரிசையில் முதலிடம்

ஜோகோவிச் பெப்பர்ஸ்டோன் ஏடிபி தரவரிசையில் 400வது வாரமாக ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து மேலும் ஓர் சாதனையைப் படைத்துள்ளார்.

நிட்டோ ஏடிபி இறுதிப் போட்டியின் போது பெப்பர்ஸ்டோன் வழங்கிய ஏடிபி இயர்-எண்ட் நம்பர். 1, என்ற பட்டத்தை எட்டாவது முறையாக வென்றார் அவர்.

"இது ஒரு நல்ல சாதனை, 400 வாரங்கள் நம்பர் 1 இடத்தில் என்பது வரலாற்றில் ஒருபோதும் நடைபெறவில்லை. நிச்சயம் காலப்போக்கில் என்றாவது இந்த சாதனையை யாராவது உடைப்பார்கள். ஆனால் எனது சாதனை நீண்ட காலம் இருக்கும் என்று நம்புகிறேன்," என்று கூறி பெருமிதம் அடைந்தார் 36 வயது ஜோகோவிச்.

ஏடிபி 2023 இரட்டையர் இறுதிப்போட்டி: ஒரு கண்ணோட்டம்

டுரினில் நவம்பர் 18 நடந்த ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் ராஜீவ் ராம் - ஜோ சாலிஸ்பரி ஜோடி, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மார்செல் கிரானோல்லர்ஸ் - ஹோராசியோ செபாலோ என்ற ஜோடியை தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஏடிபி சாம்பியன்ஸாக வாகை சூடினர்.

அரையிறுதி வரை சென்ற இந்தியாவைச் சேர்ந்த ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ எப்டன் ஜோடி , 7-5, 6-4 என்ற செட் கணக்கில் கிரானோல்லர்ஸ் - செபாலோஸ் ஜோடியிடம் தோல்வியுற்று, தங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com