நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து பலம் வாய்ந்த அணியான நியூசிலாந்து அணி வெளியேறியது. இதனையடுத்து, அணியின் கேப்டன் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு முதல் கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி 10 ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ளது.
அதில் மொத்தம் 7 போட்டிகளில் அரையிறுதி வரைச் சென்றுள்ளது. நியூசிலாந்து அணியின் ஒரு தூணாக விளங்கிய கேன், சமீபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு முன்போன்ற வேகத்தில் அவரால் விளையாட முடியவில்லை. ஆகையால், சமீபக்காலமாக விளையாடிய சில தொடர்களில் சொல்லிக்கொள்ளும்படி அவர் விளையாடவில்லை. அதேபோல், நடப்பு ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில், கேன் தலைமையிலான நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.
இந்த நிலையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை கேன் வில்லியம்சன் நிராகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமிருந்து எந்த சம்பளமும் வராது. அதேபோல் நியூசிலாந்து அணியில் கூட தேவைப்பட்டால் மட்டுமே அழைப்புவிடுக்கப்படும். கேனுக்கு வெளிநாட்டு தொடர்களிலும் எந்த கட்டுபாடும் இல்லாமல் விளையாடும் சுதந்திரம் உள்ளது.
மேலும் நியூசிலாந்து அணியின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன்சியையும் கேன் வில்லியம்சன் துறந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்கவும் தயாராகவுள்ளேன். நியூசிலாந்து சம்மரின் போது வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன்.
அதனால் என்னால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது. நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு திருப்பி கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். கிரிக்கெட்டை கடந்து வெளியில் எனது வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும், அவர்களுடன் உடனிருப்பதும் முக்கியமாக உள்ளது.” என்று பேசினார்.