இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்தப் பயிற்சியாளர் யார் என்பதை தெரிந்துக்கொள்ளதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் இன்று பயிற்சியாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வில், ஒரு சுவாரஸ்யமான நாடகம் அரங்கேறியுள்ளது.
இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் ஆவார். இவரின் பதவிக்காலம் இந்த டி20 உலகக்கோப்பைத் தொடருடன் முடிவடைகிறது. ராகுல் ட்ராவிட் சென்ற ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரே ஓய்வுப்பெற்றிருக்க வேண்டும். ஆனால், பிசிசிஐ அவருடைய பதவிக்காலத்தை இந்தாண்டு உலகக்கோப்பை தொடர் வரை நீடித்தது.
ரவிசாஸ்திரிக்குப் பிறகு ராகுல் ட்ராவிட் தலைமைப் பயிற்சியாளராக நவம்பர் 2021-ல் பொறுப்பேற்றார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வென்றிருக்காவிட்டாலும் ஒருநாள், டெஸ்ட், டி20 என்று மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2022, டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்றது இந்திய அணி. ட்ராவிடின் பயிற்சியில் 2023, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரன்னர், 2023, உலகக் கோப்பையிலும் ரன்னர் என அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடிய விதம் அனைவரையும் பெரிதும் ஈர்த்தது.
அந்தவகையில், டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் ட்ராவிடின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கு கூகில் ஃபார்ம் மூலமாக அப்ளே செய்யும் வகையில் பிசிசிஐ வசதிசெய்தது. இதில் மொத்தம் 3000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் பெரும்பாலும் போலியான விண்ணப்பங்களே. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக், தோனி உள்ளிட்டோர் பெயரிலெல்லாம் போலியாக விண்ணப்பித்தனர்.
இதனையடுத்து இந்த போலி விண்ணப்பங்களை நீக்கிவிட்டு பார்த்தால் நிச்சயமாக இந்திய அளவில் சில பயிற்சியாளர்கள், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருப்பார்கள். ஆனால், பிசிசிஐ ஒட்டுமொத்த விண்ணப்பங்களையும் தூக்கி எறிந்து இருக்கிறது. கவுதம் கம்பீரை தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்க போகிறோம் என்பதை பிசிசிஐ முன்கூட்டியே முடிவு செய்துவிட்டது. அவரிடம் தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டுவிட்டது.
இந்த மூவாயிரம் விண்ணப்பங்களில் ஒருவர் கூட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. சாஸ்த்திரத்திற்காக வேண்டுமென்றே முதலில் கூகில் ஃபார்மில் விண்ணப்பங்கள் ஏற்கபட்டு, பின்னர் அவற்றை நிராகரித்திருக்கிறது பிசிசிஐ.
கவுதம் கம்பீரை தான் தேர்வு செய்யப் போகிறோம் என்றால் எதற்காக ஜனநாயக முறைப்படி விண்ணப்பங்களை பெற வேண்டும்? தலைமை பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பை பொது தளத்தில் ஏன் வெளியிட வேண்டும்? என்ற கேள்விகளை கிரிக்கெட் ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்.
கவுதம் கம்பீரைதான் பயிற்சியாளராக நியமிக்கப்போகிறோம் என்று கூறியிருந்தாலே நாங்கள் ஏற்றுக்கொள்வோம். ஏனெனில், அவர் இந்திய அணிக்குத் தகுதி வாய்ந்த பயிற்சியாளர் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.