நானோ சச்சினோ அல்ல: இவர் தான் சிறந்த பேட்ஸ்மேன்: பிரையன் லாரா!

Carl Hooper
Carl Hooper
Published on

உலகம் முழுக்க பிரபலமான கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர் தான் என பிரையன் லாரா பாராட்டியுள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஜாம்பவான்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா ஆகிய இருவருக்கும் என்றுமே இடமுண்டு. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து இமாலய சாதனை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இன்றும் தொடர்கிறார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவும், எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் அதிகபட்சமாக இவர் அடித்த 400 ரன்களை இன்றளவும் யாராலும் நெருங்க முடியவில்லை. சமகாலத்தில் விளையாடிய இந்த இரண்டு வீரர்களை விடவும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் தான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என பிரையன் லாரா பாராட்டியுள்ளார்.

1990-களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியவர் தான் கார்ல் ஹூப்பர். இவரது ஸ்டைலான பேட்டிங் ரசிகர்களை மட்டுமல்லாது, சக கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் ஈர்த்து விடும். இவர் குறித்து பிரையன் லாரா தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பது தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

“நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்றால் கார்ல் ஹூப்பரைத் தான் சொல்வேன். இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால், சச்சின் மற்றும் என்னால் கூட இவருடைய அசாத்திய திறமையை நெருங்க முடியாது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இவரது புள்ளி விவரங்களை நாம் கவனித்தால், அது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அணியின் நலனைக் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க தன்னுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவதை புறந்தள்ளி விட்டு, கேப்டனாக அற்புதமாக செயல்பட்டார். கேப்டனாக இவரது பேட்டிங் சராசரி 50-ஐத் தொடும் என்றால், எவ்வளவு சிறந்த கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இவர் விளையாடிய போட்டியைப் பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் இவர் என்று எனக்குள் தோன்றியது. மற்ற சீனியர் வீரர்களை விடவும் நேர்த்தியாக ஹூப்பர் விளையாடிய விதத்தைக் காண விவியன் ரிச்சர்ட்ஸ், தேஷ்மண்ட் மற்றும் கோர்டான் க்ரீனிட்ஜ் ஆகியோர் தங்களின் வேலையைக் கூட புறந்தள்ளி விடுவார்கள். இந்த அளவிற்கு சிறப்பாக விளையாடிய ஒரு வீரரை, கிரிக்கெட் உலகில் பலரும் தெரிந்து கொள்ளலாமலேயே இருக்கின்றனர்” என லாரா தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
"நான் இவரைத்தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கருதுகிறேன்" - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
Carl Hooper

கிரிக்கெட்டின் கடவுள் என்று செல்லமாக அழைக்கப்படும் சச்சினை விடவும் மற்றொரு வீரரை பிரையன் லாரா பாராட்டி இருப்பது கிரிக்கெட் உலகில் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இருப்பினும் சிறந்த பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸே, ஹூப்பரின் ஆட்டத்தை ரசித்து இருக்கிறார் என்றால் அது பெரிய விஷயம் தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com