ஒரு காலத்தில் ஹாக்கி என்றாலே இந்தியா தான் கெத்து என்ற நிலை இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து இரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று தற்போது மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி, முதன்முதலில் ஆங்கிலேயர்களால் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க காலத்தில் இந்திய இராணுவ வீரர்களின் வலிமையையும், சகிப்புத்தன்மையையும் மேம்படுத்தவே ஹாக்கி விளையாட்டு பயன்பட்டது. 1908 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஹாக்கி அறிமுகப்படுத்தப்பட்டாலும், 1928 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் தான் இந்தியா முதன்முறையாக பங்கேற்றது. அதுவும் ஆங்கில ஆட்சியின் கீழ் தான் இந்திய அணி விளையாடியது.
தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக்கிலேயே தங்கப் பதக்கத்தை வேட்டையாடி உலக நாடுகளுக்கு ஆச்சரியம் அளித்தது இந்திய அணி. இதுமட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெற்ற 1932 மற்றும் 1936 ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கத்தை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. அப்போதைய இந்திய அணியில் மிகச் சிறந்த ஹாக்கி வீரராக அலகாபாத்தைச் சேர்ந்த தியான் சந்த் சிங் ஜொலித்துக் கொண்டிருந்தார்.
இந்திய விடுதலைக்குப் பின் சுதந்திர நாடாக 1948, 1952 மற்றும் 1956 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் ஹாக்கியில் மீண்டும் தங்கப் பதக்கங்களை வேட்டையாடி ஹாட்ரிக் சாதனையைப் படைத்தது. 1960 ஒலிம்பிக்கில் பாகிஸ்தானிடம் தங்கப் பதக்கத்தை இழந்த இந்தியா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. அடுத்து 1964 ஒலிம்பிக்கில் பாகிஸ்தனிற்கு பதிலடி கொடுத்து தங்கப்பதக்கத்தை மீண்டும் வென்றது இந்தியா.
இதன் பிறகு 1968 மற்றும் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய அணி, 1980 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்தது. 1928 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் ஹாக்கி உலகையே ஆட்சி செய்து கொண்டிருந்தது இந்தியா. அதற்கு பிறகு, புல் தரைக்குப் பதிலாக செயற்கை ஆடுகளங்கள் வந்து விட்டன. அதற்கேற்ப இந்திய அணி தங்களை மேம்படுத்திக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தது. ஆகையால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் எந்தப் பதக்கத்தையும் வெல்ல முடியாமல் தவித்து வந்தது.
செயற்கை ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்ட இந்திய அணி 40 ஆண்டுகள் ஒலிம்பிக் பதக்க கனவை கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நிறைவேற்றியது. இதற்கு பிறகும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும், ஆசிய சாம்பியன்ஸ்ஷிப் தொடரில் தங்கப் பதக்கத்தை வென்று பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 51 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வென்று அசத்தியது. காலிறுதியில் கிரேட் பிரிட்டனை 10 வீரர்களை வைத்துக் கொண்டே வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஜெர்மனியுடன் போராடி தோல்வி கண்ட போதிலும், இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அடுத்ததாக வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயினை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றது ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி. கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் சிறாப்பாக விளையாடி எதிரணியினரின் கோல் வாய்ப்புகளைத் தடுத்து வெற்றி வாய்ப்பை எளிதாக்கினார்.
இந்திய ஹாக்கி அணி 8 தங்கப் பதக்கங்களை வென்ற ஒலிம்பிக்க் தொடரில் 7 ஒலிம்பிக் தொடரில் தியான் சந்த் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பின் தன்ராஜ் பிள்ளை 20 ஆண்டுகளாக ஹாக்கி அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.
தற்போது ஹர்மன்பிரீத் சிங், ஸ்ரீஜேஷ், ஹர்திக், அமித் மற்றும் அபிஷேக் உள்ளிட்ட பல வீரர்கள் இந்திய ஹாக்கி அணியை மீண்டும் தலை நிமிர்த்தி உள்ளனர். ஹாக்கியில் பழைய இந்திய அணியாக உருவெடுத்த வீரர்கள், இனி வரும் காலங்களில் பல வெற்றிகளை நிச்சயமாக குவிப்பார்கள். அழிவின் பாதையில் இருந்து இந்திய ஹாக்கி அணி தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பது ஹாக்கி முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.