
கிரிக்கெட் வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் புதிய விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கிரிக்கெட்டை மேலும் சுவாரஸ்யமாக மாற்றவே புதிய விதிமுறைகள் உருவாக்கப்படுவதாக ஐசிசி கூறுகிறது. ஆனால், இந்த விதிகள் அனைவருக்கும் பொதுவானதாக இல்லை என்பதே பலருடைய கருத்து. இந்நிலையில், நவீன கால கிரிக்கெட்டில் 50 ஓவர்கள் வீசப்படும் ஒருநாள் போட்டிகள் உயிர்ப்புடன் இல்லை எனவும், இது கிரிக்கெட்டிற்கே ஆபத்து எனவும் இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் காட்டமாக பேசியிருக்கிறார்.
டி20 கிரிக்கெட் போட்டிகள் வருவதற்கு முன்பு வரை, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறையாமல் இருந்தது. அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமானதில் இருந்து, மற்ற ஃபார்மேட்களுக்கு மவுசு குறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அதற்கேற்ப விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
இருநாடுகளுக்கு இடையே நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதற்கு, இன்றைய நிலையில் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைப்பதில்லை. முன்பெல்லாம் முதலில் விளையாடும் அணி 250+ ரன்களை எடுத்தால், அதனை எட்டிப் பிடிப்பது எதிரணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். ஆனால் இன்றோ 350 ரன்களைக் கூட எளிதாக விரட்டி பிடிக்கின்றனர். இந்த மாதிரி நடக்கும் போது பலரும் பௌலர்களைத் தான் குறை கூறுவார்கள். ஆனால் உண்மையை ஆராய்ந்தால், விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐசிசி விதிகள் கூட அதிரடி ஆட்டத்திற்கே துணை போகின்றன என இவர் காட்டமாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஐசிசி நடத்தும் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களைத் தவிர, மற்ற தொடர்களைப் பார்க்க ரசிகர்கள் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதற்கு முக்கிய காரணமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஐசிசி விதிகள் தான்.
ஒருநாள் கிரிக்கெட் இன்றைய காலத்தில் காலாவதியாகி விட்டது. இன்றைய காலகட்டத்தில் இருப்பதிலேயே மிகவும் மோசமான ஃபார்மேட் என்றால் அது ஒருநாள் கிரிக்கெட் தான். உள்நாட்டுத் தொடர்களில் கிடைக்கும் பணத்தால் வீரர்கள் பலரும், நாட்டுக்காக விளையாட ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் வீரர்கள் பலரும் விரைவிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, மற்ற நாடுகளில் நடக்கும் உள்நாட்டுத் தொடர்களில் பங்கேற்பார்கள்” என மொயின் அலி தெரிவித்தார்.
இங்கிலாந்து அணிக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மொயின் அலி. இவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 138 ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். தற்போது இவர் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார்.
முன்பைப் போல் வீரர்கள் யாரும் சிங்கிள்ஸ் எடுப்பதில் பொறுமை காட்டுவதில்லை. பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசுவதில் மட்டுமே குறிக்ககோளாக இருக்கின்றனர். வீரர்களின் இந்தப் போக்கு கிரிக்கெட்டை அழிவின் பாதைக்குள் தான் கொண்டு செல்லும்.