உலகின் மலையேற்ற வீரர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை கொடி நாட்டுவது எப்படி ஒரு கனவாக இருக்கிறதோ, அதேபோன்ற இன்னொரு கனவு, உலகின் 7 கண்டங்களில் இருக்கும் 7 உயரமான சிகரங்களில் ஏறி சாதனைப் படைப்பது. ஒரு சிகரமானால் சரி, 7 சிகரங்களில் ஏறுவது என்றால் அது பெருங்கனவுதானே? அப்படியான பெருங்கனவை நனவாக்கியதோடு, 7 கண்டங்களில் உள்ள 7 உயரமான சிகரங்களின் உச்சியை அடைந்து சாதனை படைத்த முதல் இந்திய பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் பிரேமலதா அகர்வால்.
சாகச விளையாட்டு சாதனைக்காக இந்திய அரசால் வழங்கப்படும் 'டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது' பெறுவது அத்தனை சுலபம் இல்லை. குறிப்பாக, பெண்கள் இந்த விருதை பெறுவது அத்தனை எளிதானது இல்லை. ஆனால், பிரேம்லதா அகர்வால், இந்த விருதையும் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
1963ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் நகரில் பிறந்த டஹ்வர் பிரேம்லத் அகர்வால், சிறுவயதில் இருந்தே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். 30 வயதிற்குப் பிறகு தான் தன்னுடைய சாதனை பயணத்தை தொடங்கினார்.
நேபாளத்தில் உள்ள 'இமாஜ் சே' தான் பிரேம்லதா தடம் பதித்த முதல் சிகரம்.
தொடர்ந்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள காரோகரம் கணவாயை கடந்தார்.
இமயமலை காரோகரத்தில் உள்ள சால்டோரோ காங்ரி சிகரத்தில் ஏறினார்.
பின்னர் தார் பாலைவனம் பயணத்தில் பங்கு எடுத்து அசத்தினார்.
குஜராத்தின் பூஜ் முதல் பஞ்சாபின் வாகா எல்லை வரை 40 நாட்கள் ஒட்டக சவாரி செய்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண்ணான, பச்சேந்திரி பாலின் வழிகாட்டுதல்படி 2011 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். அப்போது அவருக்கு வயது 48. இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வயதான இந்திய பெண் என்ற பட்டம் பிரேமலதா வசமானது.
அதோடு நின்று விடாமல் பிற கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை தொடும் முயற்சியில் இறங்கினார். 2012 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா கண்டத்தின் கிளிமஞ்சாரோ சிகரம், தென் அமெரிக்கா கண்டத்தின் மௌன்ட் அகௌன்காகுவா(mount aconcagua), ஐரோப்பிய கண்டத்தின் மௌன்ட் எல்டிரஸ்(mount Elbrus), ஆகிய சிகரங்களும், 2013ஆண்டு வட அமெரிக்காவின் தெனாலி(mount denali), அண்டார்டிகா கண்டத்தின் வின்சன் மாசிப்(Vinson massif), ஆஸ்திரேலியா கண்டத்தின் மௌன்ட் கோஸ்கி டிஸ்கோ(mount Kosciuszko) ஆகிய சிகரங்களில் உச்சியை அடைந்து சாதனை படைத்தார்.
இவரின் சாதனைகளை பாராட்டி 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் 2017 ஆம் ஆண்டு டென்சிங் நோற்கே தேசிய சாகச விருது வழங்கப்பட்டது. 61 வயதிலும் சிகரம் ஏறுவதில் ஆர்வம் கொண்டிருக்கும் பிரேம்லதா அகர்வால், சிகரங்கள் அடைய விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.