நடப்பு ஆண்டு ஒலிம்பிக் தொடரில் தங்க பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமின் மாமனார் ஒரு எருமை மாட்டை பரிசாக வழங்கியுள்ளது உலக மக்களிடைய பேசுபொருளாக மாறியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கானேவால் கிராமத்தைச் சேர்ந்த நதீம், வாஸ் என்பவரின் இளைய மகள் ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. குடும்பத்தையும் ஈட்டி எறிதலையும் இரு கண்களாக பாவித்து வருகிறார் நதீம்.
படிபடியாக தனது முயற்சியினால், ஒலிம்பிக் வரைச் சென்றார். இறுதிபோட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுடன் மோதினார். நீரஜ்தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் 89.45 மீட்டர் மட்டுமே வீசி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதற்கு முன் ஒலிம்பிக்கில் 90 மீட்டர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில் அர்ஷத் நதீம் அந்த சாதனையை முறியடித்து 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசினார்.
இந்த வெற்றிக்கு நீரஜ் அம்மா உட்பட இந்திய மக்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏனெனில், 1992ம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கிறது. அதேபோல், இந்த நடப்பு தொடரிலும் பாகிஸ்தானின் ஒரே பதக்கத்தை வென்ற வீரர் என்ற பெருமையை சேர்த்துள்ளார் நதீம். இது உலக நாடுகள் மத்தியில் அவரின் பெயரைப் பதிய வைத்துள்ளது.
ஒலிம்பிக் தொடர் முடிந்து, இப்போது அவர் நாடு திரும்பிய நிலையில், நதீமுக்கு அனைவரும் லட்சக்கணக்கில் பரிசுத்தொகைகளும், பரிசுகளும் வழங்கி வருகின்றனர். ஆனால், அவரது மாமனார் எருமை மாடு வழங்கியதுதான் அனைவருக்குமே ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இதுகுறித்து வீரரின் மாமனார் கூறியதாவது, “எருமை மாடை பரிசளிப்பது என்பது ஒருவருக்கு அதிக செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். எங்கள் கிராமத்தில் இதுதான் நடைமுறை. அதனால், எனது மருமகனுக்கு எருமை மாட்டை பரிசளித்தேன்." என்று பேசியுள்ளார்.
இந்த வழக்கத்தைப் பற்றி அறிந்துக்கொண்டபின்தான் அனைவருக்கும் ஒரு திருப்தி கிடைத்தது. இந்த சம்பவத்திற்கு மட்டும் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், அவரவர் ஆளுக்கொரு கதையை சொல்லி நம்மை குழப்பத்தில் தள்ளியிருப்பர்.