தாத்தாவின் ஊக்கத்தில் தொடங்கிய மல்யுத்தப் பயணம் - பதக்கம் வென்ற அமன் ஷெராவத்!

Aman
Aman
Published on

சிறு வயதிலேயே பல துன்பங்களை அனுபவித்து வாழ்க்கையையே வெறுத்த ஒரு சிறுவனின் வெற்றிப் போராட்டத்தை கேட்கிறீர்களா! இனி எதுவுமே இல்லை என வருந்திய சிறுவனுக்கு ஊக்கமளித்து ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு உயர்த்திய அவனது தாத்தா யார் தெரியுமா? வாருங்கள் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பத்து வயதில் தாயை இழந்த சிறுவன், தந்தையின் நிழலில் இளைப்பாறத் தொடங்கினார். சிறிது நாட்களிலேயே ஒரு நாள் இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற தந்தையும் திரும்ப வரவில்லை. பெற்றோரை இழந்த பிறகு ஏதும் அறியா அந்தச் சிறுவனுக்கு ஆதரவாய் தோள் கொடுத்தார் அவருடைய அம்மா வழி தாத்தா மாங்கேரம் ஷெராவத். சிறுவயதில் பல துன்பங்களை அனுபவித்து எதுவுமே வேண்டாம் என்று நினைத்தவர்தான், இன்று ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அசத்திய அமன் ஷெராவத்.

பெற்றோர் இல்லாத சூழலில் தாத்தாவின் ஊக்கமும், பயிற்சியாளரின் துணையும், நண்பர்களின் நம்பிக்கையும் தான் இன்று ஒலிம்பிக் மேடையில் அமன் ஷெராவத் நிற்க காரணம்.‌ தனக்கிருந்த பல்வேறு தடைகளையும் தாண்டி, நண்பர்களின் உதவியுடன் துரோணாச்சாரியா விருது பெற்ற பயிற்சியாளர் லலித் குமாரிடம் மல்யுத்தப் பயிற்சியில் சேர்ந்தார். அந்த காலகட்டத்தில் அமனுக்கு எல்லாமே மல்யுத்தம் தான் என்றிருந்தார். அப்போது அவருடைய சக வீரரான சாகர் உற்ற நண்பராக பல உதவிகளை இவருக்குச் செய்துள்ளார்.

மல்யுத்தத்தில் தேர்ச்சி பெற்ற பிறகு தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலந்து கொண்டு பல வெற்றிகளை குவித்தார். 2021 ஆம் ஆண்டில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அமன் ஷெராவத் அசத்திய போது அவருக்கு வயது 18 தான். 2022 ஆசிய விளையாட்டில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். அதே ஆண்டு ஸ்பெயினில் நடந்த 23 வயதுக்குட்பட்டோருக்கான (U-23) உலக மல்யுத்த சாம்பியன்ஸ்ஷிப்பில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி ஏற்றம் கண்டார். 2023 ஆசிய சாம்பியன்ஸ்ஷிப் தொடரில் தங்கப் பதக்கத்தையும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்று முன்னேற்றப் பாதையில் முத்திரை பதித்தார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ஆடவர் சார்பில் மல்யுத்தத்தில் களம் கண்ட ஒரே வீரர் அமன் ஷெராவத் மட்டுமே. இவர் 57 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் கலந்து கொண்டார். நிச்சயமாக பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெண்கலப் பதக்கத்தை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
தற்காப்பு கலை டூ துப்பாக்கிச் சுடுதல்: மனு பாகரின் வெற்றிப்பாதை இதோ!
Aman

தகுதிச் சுற்று மற்றும் காலிறுதியில் எதிரணி வீரருக்கு ஒரு புள்ளியைக் கூட கொடுக்காமல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜப்பான் வீரர் ரெய் ஹிகுச்சியிடம் தோல்வியைக் கண்டாலும், போர்ட்டோரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸை வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பாரம்பரிய மல்யுத்த குடும்பத்தைச் சேர்ந்த அமன் ஷெராவத் கூறுகையில், “நான் களத்தில் இறங்கினால் எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முயற்சிப்பேன். எதிராளி யார் என்றெல்லாம் சிந்திக்கவே மாட்டேன்” என்று தனது வெற்றி ரகசியத்தைக் கூறினார்.

தாங்க முடியாத துயரத்தில் இருந்து மீண்டு வந்த அமன் ஷெராவத் இன்று ஒலிம்பிக் மேடையை அலங்கரித்து இந்தியக் கொடியை பறக்க விட்டுள்ளார். எத்தகைய சூழலிலும் தன்னம்பிக்கையையும், முயற்சியையும் விட்டுவிடக் கூடாது என்பதற்கு அமன் ஷெராவத் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com