
டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக ரெட் பால் தான் பயன்படுத்தப்படும். ஒருநாள் போட்டியில் பயன்படுத்தப்படும் வெள்ளைப் பந்தை விட இது கொஞ்சம் கடினமாக இருக்கும். சமீப காலங்களில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதில் மட்டும் பிங்க் பால் பயன்படுத்தப்படுகிறது. இரவில் விளையாடும் போது வீரர்களுக்கு பந்து தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகவே பிங்க் நிறத்தில் பந்து உபயோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ரெட் பால் மற்றும் பிங்க் பால் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 13 போட்டிகளில் விளையாடி 12 போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து, பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் என்றாலே நாங்கள் தான் ராஜா என்பது போல் வீறுநடை போடுகிறார்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்கள். இந்தியா தான் விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. ரெட் பாலுடன் பிங்க் பாலை ஒப்பிட்டால், நிறத்தில் மட்டுமல்ல அதன் தன்மையிலும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
ரெட் பால் vs பிங்க் பால்
*ரெட் பாலில் நிறத்திற்காக மட்டுமே டை அடிக்கப்படுகிறது. ஆனால் பிங்க் பாலில் பாலியூரேதின் எனும் கெமிக்கலும் பயன்படுத்தப்படுகிறது.
*ரெட் பாலில் வெள்ளை நிற நூலில் சீம் தைக்கப்படும். ஆனால் பிங்க் பாலில் கறுப்பு நிற நூலில் தைக்கப்படும்.
*புதியதாக இருக்கும் போது மட்டுமே ரெட் பால் ஸ்விங் ஆகும். ஆனால் புதியதாக இருக்கும் போது மட்டுமின்றி, இரவு நேரத்திலும் பிங்க் பால் ஸ்விங் ஆகிறது. மேலும் ரிவர்ஸ் ஸ்விங் ஆக பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது அவசியம். சில சமயங்களில் பிங்க் பால் ரிவர்ஸ் ஸ்விங் ஆக 50 ஓவர்கள் கூட ஆகலாம்.
*ஆஃப் ஸ்பின்னர்கள் பிங்க் பாலை இன்னிங்க்ஸ் தொடங்கிய உடனே சுழல வைக்க முடியாது. இருப்பினும் ஸ்பின்னர்கள் விரைவாக பந்து வீசினாலும், அவர்கள் எதிர்பார்க்கும் கோணத்தில் பால் திரும்பாது. ரெட் பாலைப் பொறுத்தவரை ஆஃப் ஸ்பின்னர்களால் விரைவிலேயே சுழல வைக்க முடியும்.
*பிங்க் பாலில் இருக்கும் கூடுதலான கோட்டிங்கால், ரெட் பாலை விடவும் தேய்மானம் அடைவதற்கு நீண்ட நேரம் ஆகும். மேலும் இந்தப் பந்துகளை பௌலர்கள் வீசும் போது அதிகளவில் சறுக்கவும் செய்யும். ஆகையால் பிங்க் பால் களத்தில் பிட்ச் ஆன பிறகு, அதன் வேகத்தில் மாற்றம் இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் குழப்பமடைந்து விக்கெட்டை பறிகொடுக்க நேரிடும்.
ரெட் மற்றும் பிங்க் நிறப் பந்துகளுக்கு இடையே இருக்கும் இந்த வித்தியாசங்களை பேட்ஸ்மேன்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப விளையாடவில்லை என்றால், எளிதில் அவுட் ஆகி விடுவார்கள்.
பிங்க் பாலில் இருக்கும் கூடுதலான கோட்டிங் தான், இது வித்தியாசமாக செயல்படுவதற்கு முக்கிய காரணம். இருப்பினும், பிங்க் பால் பற்றிய புரிதல் இருந்து, கொஞ்சம் அனுபவம் பெற்றால் பேட்ஸ்மேன்களால் நிச்சயமாக ரன்களைக் குவிக்க முடியும்.