
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்காக பல வீரர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் எவ்வளவு தான் சாதித்தாலும், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியும், பல ஆண்டுகள் கழித்தே சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆனால், இன்னும் வாய்ப்புக்காக ஏங்கித் தவிக்கும் வீரர்கள் ஏராளம். அவ்வகையில் தற்சமயம் நடக்கும் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் அதிக ரன் குவித்து வருபவர் யார் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ரஞ்சி கோப்பை, இராணி கோப்பை, துலீப் கோப்பை மற்றும் விஜய் ஹசாரே டிராபி உள்பட பல தொடர்கள் இந்தியாவில் நடத்தப்படுகின்றன. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தான் இந்திய அணிக்குத் தேர்வாகி வந்தனர். ஆனால் ஐபிஎல் வந்த பிறகு, தேர்வுக்குழுவின் கவனம் ஐபிஎல் போட்டிகளின் பக்கம் திரும்பியது. இதனால் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு பல வீரர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதும் உண்மை.
பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என இந்திய வீரர்கள் உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில் மிகவும் கவனிக்கத்தக்க வீரராக இருப்பவர் கருண் நாயர். வீரேந்திர ஷேவாக்கிற்குப் பிறகு, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் கண்ட இரண்டாவது இந்தியர் இவர் தான். முச்சதம் விளாசிய வீரருக்கு, அடுத்தடுத்த வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகத் தான் இருக்கும். ஆனால், கருண் நாயருக்கு மட்டும் இது நடக்கவில்லை. ஏனெனில் அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்திய அணியில் விளையாடி கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் இன்னமும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெறுவதில் உறுதியான நம்பிக்கையுடன், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
நடந்து முடிந்த விஜய் ஹாசாரே தொடரில் விதர்பா அணியின் கேப்டனாக செயல்பட்ட கருண் நாயர், 6 போட்டிகளில் 5 சதங்களை விளாசி அசத்தியிருக்கிறார். மேலும் இறுதிப் போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்து வெற்றிக்கும் உதவினார். இந்தத் தொடரில் இவர் ஒருமுறை மட்டுமே அவுட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் 7 போட்டிகளில் 752 ரன்களைக் குவித்து அபாயகரமான பேட்ஸ்மேனாக உருவாகி இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் ரன் மெஷினாக செயல்படும் இவர், இந்திய அணியில் நிச்சயம் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2023-24 ரஞ்சி கோப்பைத் தொடரில் 700 ரன்களுக்கும் மேல் அடித்திருந்தார் கருண் நாயர். இதுதவிர்த்து கடந்த வருடம் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக விளையாடினார். அங்கு பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்து, தற்போது இந்தியாவில் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். 7 போட்டிகளில் 5 சதங்களுடன் 6-ல் நாட் அவுட் என்றால், அது எவ்வளவு பெரிய சாதனை. பிசிசிஐ கருண் நாயரை இப்போதும் புறக்கணித்து விட்டால், இழப்பு இந்திய அணிக்குத் தான்.
இந்தியாவின் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி தற்போது ரன் குவிக்கத் தடுமாறி வரும் சூழலில், உள்ளூர் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவது பிசிசிஐ-க்குத் தான் தலைவலியாக இருக்கும்.