இந்தியா வங்கதேசம் இடையே நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டியில் தன்னை சேர்க்க வேண்டாம் என்று முகமது ஷமி கூறியிருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.
வங்கதேச அணிக்கும் இந்திய அணிக்கும் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. பின்னர் இரு அணிகளும் டி20 தொடரிலும் விளையாட உள்ளன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள வங்கதேச வீரர்கள் நேற்று முன்தினம் சென்னை வந்து இறங்கினர். தற்போது இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அடுத்த ஐந்து மாதங்களில் இந்திய அணி பத்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் முகமது ஷமி உள்ளனர்.
பும்ரா வங்கதேசத்து அணிக்கு எதிரான தொடரில் களமிறங்குகிறார். முகமது ஷமியும் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற செய்திகள் கசிந்தன. இதனையடுத்து பிசிசிஐ ஏன் ஷமியை தேர்ந்தெடுக்கவில்லை என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், இப்போதுதான் தெரிந்தது, முகமது ஷமிதான் தன்னை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அதற்கான காரணமும் வெளிவந்துள்ளது.
2023ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், அதன் பின் நீண்ட கால ஓய்வில் இருந்தார். தற்போது அவர் மீண்டும் பயிற்சியை துவங்கியிருக்கிறார். ஒருமாதக் காலமாக பயிற்சியில் ஈடுபட்ட இவர், வங்கதேசத்து அணிக்கு எதிரான தொடரில்தான் போட்டியிடப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இல்லை.
தான் முழு உடற்தகுதியை பெற்ற பின்னரே இந்திய அணிக்கு திரும்ப விரும்புவதாக ஷமி அறிவித்து இருக்கிறார். ஒரு டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடும் போது திடீரென தனக்கு ஏதேனும் அசௌகர்யங்கள் ஏற்பட்டால், மீண்டும் அணியை விட்டு விலக நேரிடும் என்பதால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி, அதில் தனது உடற்தகுதியை நிரூபிக்க விரும்புகிறார். அதன் பின்னரே இந்திய டெஸ்ட் அணியில் தன்னை தேர்வு செய்யுங்கள் என அவர் பிசிசிஐ-யிடம் தெரிவித்து இருக்கிறார்.
இதனை பிசிசிஐயும் ஏற்றுக்கொண்டு அவரது முடிவுக்கு ஒப்புதல் அளித்து அணியில் தேர்ந்தெடுக்கவில்லை.