
2025 ஆண்டிற்கான BWF உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. ஆக 28, வியாழக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் உலகின் இரண்டாம் நிலை சீன பேட்மிண்டன் வீராங்கனையான வாங் ஜியியை தோற்கடித்து இந்தியாவின் பிவி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
உலக சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜியியை எதிர் கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடினார். சிந்துவின் தற்போதைய உலக தரவரிசை 15 ஆக இருந்தாலும், உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் வாங் ஜியியை போட்டு புரட்டி எடுத்து விட்டார். சிந்துவின் வேகத்தின் முன்னால் சீன வீராங்கனையின் ஆட்டம் எடுபடவில்லை.
வாங் ஜியி நிலைத்து நின்று ஆட எந்த ஒரு வாய்ப்பையும் இந்திய வீராங்கனை வழங்கவே இல்லை. சீன வீரங்கனையை 21-17 மற்றும் 21-15 என்ற செட் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றார் சிந்து. இந்தப் போட்டி வெறும் 48 நிமிடங்களில் நடந்து முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக BWF உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதிக்கு பி.வி.சிந்து முன்னேறி இருக்கிறார்.
இந்த போட்டியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து உலக சாம்பியன்ஷிப்பில் போட்டிகளில் எட்டு முறை வாங் ஜியியை மண்ணைக் கவ்வ வைத்துள்ளார். இருவருக்கும் இடையேயான போட்டிகளில் 8-0 என்ற கணக்கில் சிந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
சிந்து தனது ஆறாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வெல்ல தற்போது ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் காலிறுதியில், சிந்து இந்தோனேசியாவின் ஒன்பதாவது நிலை வீராங்கனையான புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொள்கிறார். பி.வி.சிந்துவுக்கும் புத்ரி குசுமா வர்தானிக்கும் இடையே எப்போதும் கடுமையாக போட்டி இருக்கும்.
இதற்கு முன் இருவரும் 2025 ஆண்டு சுதிர்மன் கோப்பை போட்டியில் மோதிக் கொண்டனர். இந்த போட்டியில், புத்ரி கடுமையாக சிந்துவிற்கு நெருக்கடி கொடுத்து 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். இந்தப் போட்டியில் அவர் 21-12 மற்றும் 21-13 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தினார். இந்த தோல்விக்கு, தற்போது பி.வி.சிந்து பழிவாங்கக் கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
சிந்து மீண்டும் தனது பார்மிற்கு திரும்பியது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். சிந்துவின் ஆக்ரோஷமான ஆட்டம், எதிரே விளையாடும் வீராங்கனையை நிலை குலையச் செய்யும். உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற அவரது அனுபவம், மீண்டும் ஒரு முறை புதிய அனுபவம் பெற காத்திருக்கிறது.