
கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி நடத்தும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இதில் முக்கியமான ஒரு தொடர் தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி. ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு, அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஐசிசி தொடராக இது பார்க்கப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் இருக்கும் முதல் 8 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்பதால், சாம்பியன்ஸ் டிராபி 'மினி உலகக்கோப்பை' என்று அழைக்கப்படுகிறது. இதில் 2002 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 3வது சாம்பியன்ஸ் டிராபியில் மழையால் துவண்டு போனது இந்திய அணி. அப்படி என்ன தான் நடந்தது! வாங்க தெரிந்து கொள்ளலாம்.
இந்திய அணிக்கு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன்கள் என்றால் கபில்தேவ், எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் பெயர்களைத் தான் ரசிகர்கள் கூறுவார்கள். ஆனால், இந்தப் பட்டியலில் சவுரவ் கங்குலியும் இருக்கிறார் என்பது இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த கங்குலி, ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வந்தார். இதற்கான வாய்ப்பு 2002 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அமைந்தது. ஆனால், கங்குலியை துவண்டு போகச் செய்து விட்டது மழை. இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய இந்திய அணிக்கு மழை தான் வில்லனாக மாறியது.
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 244 ரன்களை மட்டுமே எடுத்து. 245 என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி 2 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 14 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. இதனால் இறுதிப்போட்டி பாதியில் தடைபட்டதால், ரிசர்வ் டே எனும் விதிப்படி அடுத்த நாள் போட்டி தொடங்கும் என ஐசிசி அறிவித்தது.
அடுத்த நாள் போட்டியானது விட்ட இடத்தில் இருந்து தொடங்காமல், மீண்டும் முதலில் இருந்து தொடங்கியது. இதில் மீண்டும் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 227 ரன்களை மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களை எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் இறுதிப்போட்டி டிரா ஆனது. அப்போதைய ஐசிசி விதிப்படி சாம்பியன்ஸ் டிராபி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஒருவேளை ரிசர்வ் டே அன்று, போட்டி விட்ட இடத்தில் இருந்து தொடங்கி இருந்தால், இந்திய அணி இலக்கை எட்டிப் பிடித்து வெற்றி பெற்றிருக்கும். ஆனால், மீண்டும் புதிதாக ஆட்டம் தொடங்கப்பட்டதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை ஐசிசி விதிமுறையும், மழையும் தடுத்து விட்டன. இருப்பினும் 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி பெற்ற மிகப்பெரும் ஐசிசி கோப்பையாக 2002 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இப்போட்டியில் மழை குறுக்கிடாமல் இந்தியா வெற்றி பெற்றிருந்தால், ஐசிசி கோப்பையை வென்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் கங்குலியும் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பார்.