
உலக கிரிக்கெட்டில் ஐசிசி நடத்தும் தொடர்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. தற்போது ஐசிசி சார்பில் ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் என 4 விதமான தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் இந்தத் தொடரில் மட்டும் தான் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இருக்கும் முதல் 8 அணிகள் பங்கேற்கும். சாம்பியன் அணிகள் விளையாடுவதன் காரணத்தால்தான், இத்தொடர் சாம்பியன்ஸ் டிராபி என்றும், மினி உலகக்கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது. அவ்வகையில் இதுவரையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் யாரெல்லாம் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார்கள் என்று பார்ப்போம்.
ஐசிசி சார்பில் இதுவரை 8 முறை சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்பட்டுள்ளது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறும் என்பதால், ஒவ்வொரு போட்டியுமே முக்கியமான போட்டிதான். ஒன்றில் தோற்றால் கூட அரையிறுதி வாய்ப்பைத் தக்க வைப்பது கடினமாகி விடும். ஆகையால் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் போட்டிகள் கூட நாக் அவுட் போட்டிகள் போன்று பரபரப்பாக இருக்கும்.
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் தொடர் 1998 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியவர் முகமது அசாருதீன்.
அடுத்ததாக 2000, 2002 மற்றும் 2004 என தொடர்ச்சியாக மூன்று முறை சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வழிநடத்தினார் சவுரவ் கங்குலி. சாம்பியன்ஸ் டிராபியில் அதிக முறை இந்தியக் கேப்டனாக இருந்தவரும் கங்குலி தான்.
இதில் 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் கோப்பையைப் பறிகொடுத்தது. 2002 இல் சாம்பியன்ஸ் டிராபியிலும் இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணியின் கோப்பைக் கனவுக்கு அச்சுறுத்தலாக இருந்தது மழை. மழை காரணமாக இலங்கை மற்றும் இந்திய அணிக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 5வது சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக் கேப்டனாக செயல்பட்டவர் ராகுல் டிராவிட்.
2009 மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற 6வது மற்றும் 7வது சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக் கேப்டனாக செயல்பட்டவர் மகேந்திர சிங் தோனி. இதில் ஒருமுறை கோப்பையைப் கைப்பற்றத் தவறினாலும், அடுத்த முறை 2013 இல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றி சாதனை படைத்தார் தோனி.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 8வது சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக் கேப்டனாக செயல்பட்டவர் விராட் கோலி. இந்தத் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.
இதற்குப் பிறகு 7 வருடங்கள் கழித்து நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 9வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவிருக்கிறது. இதில் இந்திய அணிக் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட இருக்கிறார். இந்தத் தொடரில் இந்திய அணி மீண்டும் கோப்பையைக் கைப்பற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.