
உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டுகளில் முக்கியமானது கிரிக்கெட். அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசி-க்கு கட்டுப்பட வேண்டும். கிரிக்கெட் தொடர்களைப் பொறுத்தவரை ஐசிசி நடத்தும் தொடர்கள் மிகவும் முக்கியமானவை. இந்தத் தொடர்கள் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்படும். இதில் பங்கேற்கும் அணிகள், ஐசிசி விதிப்படி ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகும். அவ்வகையில் ஐசிசி சொல்லும் ஆடைக் கட்டுப்பாடு என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
ஐசிசி சார்பில் ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் ஆகிய நான்கு தொடர்கள் நடத்தப்படுகின்றன. இத்தொடர்களில் பங்கேற்கும் அணிகள் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே அணியின் வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டியது அவசியமாகும். அதே போல் ஆடைக் கட்டுப்பாட்டிலும் சில விதிகளை பின்பற்றி வருகிறது ஐசிசி.
பொதுவாக ஐசிசி கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, அப்போட்டி தொடர்பான லோகோவை ஐசிசி வெளியிடும். இதில் தொடரை நடத்தும் நாட்டின் பெயரும், நடத்தப்படும் ஆண்டும் கட்டாயம் இடம்பெறும்.
ஐசிசி தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுடைய ஜெர்சியில் ஐசிசி வெளியிட்ட லோகோவை பிரின்ட் செய்ய வேண்டியது அவசியமாகும். ஐசிசி தொடர்கள் மட்டுமின்றி, சர்வதேச போட்டிகள் அனைத்திலும் வீரர்களின் ஆடை விஷயத்தில் சில விதிமுறைகளை வகுத்துள்ளது ஐசிசி. ஜெர்சியின் வண்ணம், வணிக முத்திரை மற்றும் அமைப்பு ஆகியவற்றை ஐசிசி விதிகள் தெளிவாக வரையறுக்கின்றன.
ஜெர்சியில் பயன்படுத்தப்படும் வண்ணக் குழாய்கள் 0.5 செ.மீ அகலம் உடையதாக இருக்க வேண்டும் என ஐசிசி விதி கூறுகிறது. 2023 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் அணிந்த ஜெர்சியில், வண்ணக் குழாய்களின் அகலம் சற்று அதிகமாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி விதிப்படி, ஒரு ஜெர்சியில் ஒரு தொடருக்கான முத்திரை மட்டுமே இருக்க வேண்டும். இரண்டு முத்திரைகள் இருந்தால் அது ஐசிசி விதியை மீறுவதற்கு சமமாகும். 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் அணிந்திருந்த ஜெர்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முத்திரைகள் இருந்ததால், அவருக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
வருகின்ற பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தங்கள் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை பிர்ன்ட் செய்ய வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் ரீதியாக பிரச்சினைகள் இருப்பதால், இந்திய அணி பாகிஸ்தான் பெயரை பிரின்ட் செய்யுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் இந்தியா ஐசிசி விதிகளை மதிக்கும் என பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
ஐசிசி ஆடை தொடர்பான விதிகளை ஒரு அணி மீறினால், ஐசிசி தொடர்களில் சில புள்ளிகளை இழக்க நேரிடலாம். மேலும், ஒட்டுமொத்த அணிக்கும் அபராதம் விதிக்கப்படும். இதுதவிர்த்து எவ்வகையான போட்டி என்பதைப் பொறுத்து அதன் தரவரிசைப் புள்ளிகளும் குறைக்கப்படலாம். பொதுவாக ஓர் அணி களத்தில் ஓவர்களை மெதுவாக வீசும்போது புள்ளிகள் இழப்பீட்டை சந்திக்கக் கூடும். இது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஆடை விஷயத்தில் அனைத்து அணிகளும் மிகுந்த கவனமுடன் செயல்படும்.