

கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நினைவுகளில் பங்கெடுத்துக் கொண்ட சில பொருட்களை அவ்வப்போது ஏலத்திற்கு கொண்டு வந்து அவை அதிக விலைக்கு அதன் ரசிகர்களால் வாங்கப்படுவது உண்டு. அப்படி ஏலத்திற்கு வந்து கோடிகளில் விலை போன சில கிரிக்கெட் பொருட்கள் பற்றிய பதிவு தான் இது.
உலகக் கிரிக்கெட்டையே ஸ்பின் பவுலிங்கால் கட்டிப்போட்டவர் என்றால் அது ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் மட்டும்தான். அவர் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் 1001 சர்வதேச விக்கெட்டுகள்.. மற்றும் மொத்தமாய் 2935 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தவர். அவர் இங்கிலாந்துக்கு எதிராக கைப்பற்றிய முதல் விக்கெட் தான் ‘Ball of The Century’ என வர்ணிக்கப்படுகிறது.
* ஷேன் வார்ன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 145 போட்டிகளில் விளையாடும் போது பயன்படுத்திய அவரின் 'பேகி கிரீன்' தொப்பி, 2020-ல் ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்திற்காக ஏலம் விடப்பட்டு, 1,007,500 ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 4 .8 கோடி ரூபாய்க்கு மேல்) விலை போனது. இது கிரிக்கெட் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன தொப்பி என்ற சாதனையை பெற்றது. காமன்வெல்த் வங்கி (Commonwealth Bank) இந்தத் தொப்பியை ஏலத்தில் எடுத்தது.
* சர் டொனால்ட் பிராட்மேன் (Don Bradman) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த கிரிக்கெட் பேட்ஸ் மேன் ஆவார். அவரது 99.94 டெஸ்ட் சராசரி, அவர் விளையாடிய காலத்தில் அவரை "தி டான்" (The Don) என்று அழைக்க வைத்தது. அவர் 52 டெஸ்ட் போட்டிகளில் 6,996 ரன்கள் எடுத்து 29 சதங்கள் அடித்தவர். அவர் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் (1928-29) பயன்படுத்திய தொப்பி 2020ம் ஆண்டு 2.6 கோடிக்கு ஏலம் போனது.
* 1934ம் ஆண்டு பிராட்மேன் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய அவரின் கிரிக்கெட் பேட் 2021ம் ஆண்டு ஏலத்தில் 1.9 கோடிகளுக்கு ஏலம் போனது.
* பிராட்மேன், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் (1947) அணிந்த பச்சை நிற தொப்பி 1,70,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்திய ரூபாயில் ஏறக்குறைய ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பு. 2003ல் நடந்த ஏலத்தில் அந்த தொப்பியை இந்த தொகைக்கு டிம் செரிசியர் எனும் தொழிலதிபர் வாங்கினார். பிராட்மேனின் தொப்பியுடன் சேர்ந்து அது பௌவலில் உள்ள பிராட்மேன் அருங்காட்சியகத்தில் (Bradman Museum) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
* இலங்கை அணிக்கெதிரான 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் தோனி அடித்த மிகப்பெரிய சிக்ஸரை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 1983க்குப் பிறகு இந்திய அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த சிக்ஸர் அது. அந்த போட்டியில் தோனி பயன்படுத்திய பேட், 1,00,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது. அந்த தொகையின் இந்திய ரூபாய் மதிப்பு தோராயமாக ரூ.84 லட்சத்தைத் தாண்டும். 2011ம் ஆண்டு அந்த பேட்டை ஆர்.கே.குளோபல் எனும் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.
* வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கேரி சோபர்ஸ், ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடிக்கப் பயன்படுத்திய பேட் 54,257 (தோராயமாக ரூ.45.5 லட்சம்) பவுண்டுகளுக்கு ஏலம் போனது.
இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் தொடரின் போது நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக விளையாடிய சோபர்ஸ், ஸ்வான்சீ அணிக்கெதிரான போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார்.
* விராட் கோலி 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பயன்படுத்திய "ஜெர்சி" 2024ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 40 லட்சத்திற்கு விலை போனது.
* ரோஹித் சர்மா 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் பயன்படுத்திய அவர் கையெழுத்திட்ட "கிரிக்கெட் பேட்" 2024ம் ஆண்டு 24 லட்சத்திற்கு விலை போனது.
* சுப்மன் ஹில் பயன்படுத்திய சலவை செய்யாத அவர் கையெழுத்திட்ட ஜெர்சி 6 லட்சத்திற்கு ஏலம் போனது.
* 2025ம் ஆண்டு இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையே நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை சமயத்தில் பயன்படுத்திய கிரிக்கெட் பந்து மற்றும் ஸ்கோர் அட்டை 28 லட்சத்திற்கு ஏலம் போனது.