

ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த அதிக வயதுடைய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையையும் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு 38 வயது 73 நாள்களில் சச்சின் ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தார். தற்போது 38 வயது 182 நாள்களில் ரோகித் ஐசிசி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ரோகித் சர்மா ஏப்ரல் 30, 1987-ல் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், பன்சோத் நகரில் பிறந்தார். 2007-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டக்காராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரோகித் சர்மா, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இடம்பெற்ற ரோகித் சர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50 ஆவது சதத்தையும் ரோகித் சர்மா பூர்த்தி செய்திருந்தார்.
இந்த தொடரில், அதிகபட்ச ஸ்கோராக ரோகித் சர்மா 202 ரன்கள் குவித்த நிலையில், ஐசிசி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா அதிக ரன்கள் குவித்த நிலையில், சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான புள்ளிப் பட்டியலில் 36 புள்ளிகள் அதிகரித்து 781 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2023-ம் ஆண்டு முதல் ஒருநாள் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்துவந்த ஷுப்மன் கில், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் உள்ளார்.
முறியடிக்கப்படாத ரோகித் சர்மாவின் சாதங்கள் :
'ஹிட் மேன்' என அழைக்கப்படும் ரோகித் சர்மா, இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 11,000 க்கும் மேற்பட்ட ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 4,300 ரன்களும், டி 20 போட்டிகளில் 4200க்கும் மேற்பட்ட ரன்களும் எடுத்துள்ளார். இதுவரை இது முறியடிக்கப் படாமல் தான் உள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனி நபராக ஒரு போட்டியில் அதிக பட்ச ரன்களை அடித்தவர் ரோகித் சர்மா தான். 2014ம் ஆண்டு கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 264 ரன்களை எடுத்தது இன்னும் முறியடிக்கபடாத சாதனையாக உள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பலர் இரட்டை சதங்களை அடித்துள்ளனர். ஆனால் 3 இரட்டை சதங்களை அடித்து மகத்தான சாதனை படைத்தது ரோகித் சர்மா மட்டும் தான்.
*2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டது. 209 ரன்கள்.
*2014-ல் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள். இது ஒருநாள் போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
*2017-ல் இலங்கைக்கு எதிராக பஞ்சாபில் 208 ரன்கள் அடிக்கப்பட்டது.
டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு இரட்டை சதம் அடித்துள்ளார். இது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2019-ல் ராஞ்சியில் நடந்த டெஸ்டில் 212 ரன்கள் அடித்தார்.
ஒரு தொடரில் அதிக சதங்களை அடித்த பெருமையும் ரோகித் சர்மாவின் வசம் தான் இருக்கிறது. 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர் 5 சதங்களை அடித்து இருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில், ஒரு நாள் போட்டிகளில், டி 20 போட்டிகள் என மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவரும் ரோகித் சர்மா தான். 88 டெஸ்ட் போட்டிகள், 341 ஒரு நாள் போட்டிகள், 205 டி20 போட்டிகள் என மொத்த போட்டிகளில் 633 சிக்சர்கள் அடித்து அசைக்க முடியாத சாதனை படைத்தவர் ரோகித் சர்மா தான்.
ஒரு நாள் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்தவரும் ரோகித் சர்மா தான். இலங்கைக்கு எதிராக 2014ம் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர் எடுத்த 264 ரன்களில் 33 பவுண்டரிகள் அடித்துள்ளார்.