9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மகுடம் சூடியது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் கட்சித்தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2002, 2013-ம் ஆண்டுகளில் கைப்பற்றி இருந்தது. கடந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையில் மகுடம் சூடியதும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தனர். இதேபோல் சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகுவார் என்று பல்வேறு செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தது.
சமீபகாலமாக ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க போராடினாலும் அவரால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. அதற்கு இவரின் உடல் தகுதி கை கொடுக்கவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் சாம்பியன் டிராபியில் அவர் அதிரடியாக விளையாடி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் சாதனை மேல் சாதனைகளை அவர் படைத்திருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ரோகித் சர்மா மூன்று முறை இரட்டை சதங்களை அடித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததில்லை. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாமல் போகலாம். ‘ஹிட்மேன்’ என அழைக்கப்படும் ரோகித் சர்மா இதுவரை, ஒருநாள் போட்டிகளில் 11,092 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 4,301 ரன்களும், 20 ஓவர் போட்டிகளில் 4,231 ரன்களும் எடுத்துள்ளார். அவர் வசம் இருக்கும் இந்த சாதனைகளில் சிலவற்றை, எதிர்காலத்திலும் எவராலும் முறியடிக்க முடியாது என்பது நிச்சயம். ஐசிசி நடத்தும் அனைத்துவிதமான தொடர்களிலும் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற தனித்துவ சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
சாம்பியன் கோப்பை இறுதி போட்டியில் 76 ரன்கள் விளாசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஒரு நாள் கிரிக்கெட் ஐ.சி.சி. போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகனாக ஜொலித்த 4-வது கேப்டன் ரோகித் சர்மா ஆவார். இந்த நிலையில் தற்போது ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
"தற்போது நான் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை. எனது ஓய்வு குறித்து வதந்திகள் பரவக்கூடாது என்பதற்காகவே இதனை தெளிவுபடுத்துகிறேன். என்னிடம் எதிர்கால திட்டம் எதுவும் கிடையாது. என்ன நடக்கிறதோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எங்கள் அணியில் அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர் என்பதை மறுக்க முடியாது. பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தவர்கள் பேட்டிங்கிலும், பவுலிங் வாய்ப்பு பெற்றவர்கள் பந்து வீச்சிலும் நல்ல பங்களிப்பை கொடுத்ததுடன், அதில் வரலாற்று சாதனைகளையும் படைத்தனர். இப்படி அணியினருக்குள் புரிந்துணர்வும், அனைத்து வீரர்களின் சிறப்பான பங்களிப்பும் இருப்பதால் தொடர்ச்சியாக நமக்கு நிறைய வெற்றிகள் வந்து கொண்டிருக்கும்."
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.