இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இதுகுறித்து முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் பேசியிருக்கிறார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நின்றது. பின் அடுத்தடுத்த நாட்கள் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. இந்த மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது.
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவில் யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. இந்திய அணியின் முன்னணி பவுலரான அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் கண் கலங்கியப்படி விடை கொடுத்தனர்.
இவருக்கு பதில் இந்தியா ஆஸ்திரேலியா விளையாடும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் விளையாடவுள்ளார்.
இதற்கிடையே ரோஹித் ஷர்மா இதன் முதல் டெஸ்ட் போட்டியில் தனிபட்ட காரணத்தினால் விளையாடவில்லை. இரண்டாவது போட்டியில் வழக்கமான தொடக்க வரிசைக்கு பதிலாக 6-வது பேட்டிங் வரிசையில் ஆடினார். ஆனால் எதிர்பார்த்தப்படி அவர் ரன்கள் அடிக்கவில்லை. இரு டெஸ்டில் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இதனால் பல வீரர்களும் இதுகுறித்து வருத்தமும் அறிவுரையும் வழங்கி வருகிறார்கள்.
அந்தவகையில் முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார். “ரோஹித் ஷர்மா தனது யுக்திகளை சிறிது மாற்றிக்கொண்டு விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் 6-வது வரிசையிலும் அவரால் அபாயகரமான ஒரு பேட்ஸ்மேனாக செயல் பட முடியும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க வேண்டும்.
கடந்த முறை களத்தில் இறங்கியபோது தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதா? அல்லது தாக்குதல் பாணியை கடைபிடிப்பதா? என்ற குழப்பத்தில் இருந்தார். தடுப்பாட்ட மனநிலையை கைவிட்டு, அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே அவர் ஃபார்முக்குத் திரும்ப முடியும். அதேபோல் இந்திய அணியை வெற்றிபெற வைக்க முடியும்.” என்று பேசினார்.