கால்பந்து விளையாட்டு உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருடைய முழு பெயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ. 39 வயதான போர்ச்சுகீசிய கால்பந்து வீரரான இவர், தற்போது சவூதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காகவும், போர்ச்சுக்கல் தேசிய அணிக்காகவும் விளையாடும் அணிகளின் தலைவராக உள்ளார். அதிக கோல் அடித்தவர்களில் இவரும் ஒருவர். கால்பந்து வரலாற்றில் 5 முறை பாலன் டி.ஆர்.விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
இத்தகைய பெருமைக்கு சொந்தக்காரரான ரொனால்டோ புதிய யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அவர் தொடங்கிய இந்த சேனல், 90 நிமிடங்களுக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றது. அடுத்து, ஆறு மணி நேரத்திற்குள், 6 மில்லியனைத் தாண்டியுள்ளது.
தொடர்ந்து ரொனால்டோ யூடியூபின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. அது, தொடங்கி ஒருநாள் முடிவதற்குள் 10 மில்லியனைத் தாண்டியது. இதன் மூலம் ரொனால்டோ யூடியூப் சேனல், பழைய சாதனையை முறியடித்துள்ளது.
ரொனால்டோவின் சேனல், தற்போது கிட்டத்தட்ட 12 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருப்பதுடன், மேலும் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. அந்த சேனலில், ரொனால்டோ 11 ஷார்ட் வீடியோக்களை வெளியிட்டு ஆச்சர்யம் கொடுத்தார். அவை மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட வீடியோவாக அமைந்துள்ளன.
முன்னதாக யூடியூப் சேனல் தொடங்குவது குறித்து, ரொனால்டோ தனது எக்ஸ் தளத்தில், "காத்திருப்பு முடிந்தது; எனது யூடியூப் சேனல் இறுதியாக வந்து விட்டது. SIUU இந்தப் புதிய பயணத்தில் என்னுடன் இணையுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் கோலோச்சி வரும் விளையாட்டு வீரரான ரொனால்டோவுக்கு எக்ஸ் தளத்தில் 112.5 மில்லியன் ஃபாலோயர்ஸ்களும், ஃபேஸ்புக்கில் 170 மில்லியன் ஃபாலோயர்ஸ்களும், இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் ஃபாலோயர்ஸ்களும் இருக்கின்றனர்.
இதன் மூலம் சோஷியல் மீடியாவில் அதிக ஃபாலோயர்ஸ்களைக் கொண்டிருக்கும் நம்பர் 1 விளையாட்டு வீரராக ரொனால்டோ உள்ளார். மேலும், அவர் பதிவிடும் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு ரூ.26.7 கோடி வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் ஒவ்வொரு செயலும் அடுத்தவர்களால் கவனிக்கப்படுகிறது என்பது ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கான தொகையை பார்க்கும் போதே தெரிய வருகிறது.