

கடந்த மார்ச் 27-ம்தேதி தொடங்கிய 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டம் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் இன்று நடக்கிறது.
இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி காணும் அணி ஆமதாபாத்தில் நாளை மறுநாள்(மே 31-ம்தேதி) நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மல்லுக்கட்டும். தோல்வி அடையும் அணி வெளியேறும்.
குஜராத் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தது.
ராஜஸ்தான் அணி லீக் சுற்றில் 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 4-வது இடம் பெற்றது.
நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணி 8 முறையும், குஜராத் அணி 6 தடவையும் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளன.
ஏறக்குறைய சமபலத்துடன் இருக்கும் இவ்விரு அணிகளும் இன்று கோதாவில் குதிப்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில், 6 விகெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது.
அதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 31-ம்தேதி) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோத உள்ளது.