இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், இரு அணிகளும் சமனில் முடிவடைந்த நிலையில், கடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அந்த விவாதம், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரிடையே நடந்த 'கைகுலுக்குதல் நாடகம்' ஆகும்.
இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து தற்போது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின், இந்திய வீரர்களுக்கு ஆதரவாகவும், பென் ஸ்டோக்ஸ் அவர்களின் செயலுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மாஞ்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், இந்திய அணி டிரா செய்வதற்காக போராடிக் கொண்டிருந்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சதம் அடிக்கும் நிலையில் இருந்தபோது, பென் ஸ்டோக்ஸ், போட்டியின் முடிவை டிரா என்று அறிவிக்க முன்வந்தார். ஆனால், இந்திய வீரர்கள் இருவரும் அதற்கு மறுத்து, தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இது பென் ஸ்டோக்ஸை அதிருப்தியடையச் செய்தது. மேலும் ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கிரிக்கெட் ஸ்பிரிட் என்று பேரில் இந்திய வீரர்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, "ஜடேஜாவும் சுந்தரும் சதம் அடித்தார்கள். இதில் தவறான விளையாட்டு உணர்வு எங்கே இருக்கிறது? அவர்கள் டிரா செய்வதற்காகத்தான் போராடினார்கள். இங்கிலாந்து வீரர்கள் அவர்களை அவுட் செய்ய கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதும், அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து களம் கண்டனர்.
தொடர் முடிவடையாத நிலையில், ஏன் இந்திய வீரர்கள் கைகுலுக்கி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்? ஹாரி ப்ரூக்கை பந்துவீச வைப்பது பென் ஸ்டோக்ஸின் விருப்பம், அது இந்தியாவின் பிரச்சனை இல்லை. இந்திய வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். இந்த முடிவை எடுத்த கம்பீராக இருந்தாலும் சரி, சுப்மன் கில்லாக இருந்தாலும் சரி, அல்லது ஜடேஜா, வாஷிங்டன் சுந்தராக இருந்தாலும் சரி, நான் 100 சதவீதம் இந்திய அணியுடன் தான் இருப்பேன். இந்திய அணியின் முடிவுதான் சரி." என்று கடுமையாக சாடினார்.
சச்சினின் இந்த கருத்து, கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னாள் வீரர்களும் சச்சினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த கைகுலுக்குதல் நாடகம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 'விளையாட்டு உணர்வு' குறித்த புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.