இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு, சச்சினைவிட விராட் சிறந்தவர் என்று அனைவரும் சொல்லி வரும் நிலையில், சுனில் கவாஸ்கர் ப்ளீஸ் இப்படி செய்யாதீர்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது. மேலும் இந்திய அணியில் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக விராட் கோலி தனது 51வது சதத்தை பதிவு செய்தார்.
இதனால் பலரும் அவரை பாராட்டி வந்தனர். அதுவும் ரசிகர்கள் சச்சினை விட விராட் சிறந்தவர் என்றெல்லாம் கமெண்ட் செய்து வந்தனர். இதனை பகீரங்கமாக மறுத்து பேசியிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
அதாவது, “சச்சின் டெண்டுல்கரும் விராட் கோலியும் வெவ்வேறு காலகட்டங்களில் விளையாடியவர்கள். இருவரையும் ஒப்பிடுவது நியாயமற்றது. அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் பல மாற்றங்கள் இருக்கின்றது. விளையாட்டில் உள்ள விதிகள் மாறி இருக்கிறது. ஆடுகளம் மாறி இருக்கிறது. எதிரணி வீரர்கள் மாறி இருக்கிறார்கள்.
ஆசிய மக்கள் மட்டுமே இப்படி ஒப்பிடுகிறார்கள். நீங்கள் என்றாவது ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர்கள் ரிக்கி பாண்டிங்கையும், கிரேக் சேப்பலையும் ஒப்பிட்டு பேசி பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். ஆனால் நாம் மட்டும்தான் இப்படி ஒப்பிட்டு நேரத்தை வீணாக்குகிறோம். விராட் கோலி அவருடைய திறமைகளை வைத்து பல சாதனைகளை படைத்துள்ளார். அவர் இன்னும் பல சாதனைகளை படைப்பார். எனவே, ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்த்து அவருடைய திறமைகளை பார்ப்போம்” என்று கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்களுக்கு மேல் அடித்துள்ளார். விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சதங்களை நெருங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனியாவது வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பதை நிறுத்துவோமா என்பதைப் பார்ப்போம். ஏனெனில், தற்போது ஒரே காலகட்டத்தில், ஒரே சூழ்நிலையில், இருவேறு வீரர்களை ஒப்பிடுவதில்கூட நியாயம் இருந்தாலும், ஒப்பிடவே வேண்டாமே.