நான் இப்போது கிரிக்கெட்டில் சாதிக்க சச்சின் தான் முழு காரணம் என்று கூறியிருக்கிறார் சுப்மன் கில்.
இந்தியாவில் நடத்தப்படும் இந்த ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. அந்தவகையில் இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடருக்காக அனைத்து வீரர்களும் களமிறங்கி பயிற்சி செய்து வருகிறார்கள். அதேபோல், முன்னாள் வீரர்கள், பயிற்சியார்கள் அனைவரும் தங்களது கருத்துக்களையும், நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது சுப்மன் கில் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தின் தொடக்கப்புள்ளி குறித்து பேசியிருக்கிறார்.
சுப்மன் கில் தனது 24 வயதிலேயே பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த ஆண்டு கில் தனது சிறப்பு மிக்க ஆட்டத்தால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர், ஆசிய கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர், இரட்டை சதம் விளாசிய வீரர் போன்ற பல சாதனைகளைப் படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் ஆறு சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். குஜராத் அணியில் இருந்து ஹார்திக் பாண்டியா விலகிய நிலையில், சென்ற ஆண்டு முதல் அவ்வணிக்கு சுப்மன் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இப்படியான நிலையில், தனது கிரிக்கெட் பயணம் குறித்து பேசியிருக்கிறார் சுப்மன் கில். “என் தந்தையுடன் 3, 4 போட்டிகளில் விளையாடியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. ஐபிஎல்லில் 3 அல்லது நாலாவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் பயிற்சிக்காக அங்கு வந்தபோது எனக்கு ஒன்பது பத்து வயது இருக்கும். அப்போது நான் சச்சினுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அது இன்னும் என்னிடம் இருக்கிறது. நான் அவருக்கு எதிராக பந்துகளை வீசினேன். நான் கிரிக்கெட் விளையாட தொடங்குவதற்கு அவர்தான் காரணம். என் தந்தை அவருடைய மிகப்பெரிய ரசிகன். என் தந்தைக்கு போஸ்டர் ஒட்டுவதிலெல்லாம் ஆர்வமே கிடையாது. ஆனால், சச்சினுக்கு எங்கள் கிராமத்தில் பெரிய போஸ்டர் அடித்தார். “ என்று பேசினார்.