இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டு ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பிசிசிஐ தலைவருக்கான இடத்தை ரோஜர் பின்னி நிரப்பினார். இவருக்கு 72 வயது ஆகி விட்டதால், ஓய்வெடுக்க விரும்பி தற்போது தனது பதவியை இராஜினாமா செய்து விட்டார். இந்நிலையில் தற்போது துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ-யின் தற்காலிகத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) அடுத்த தலைவராக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய அங்கமாகத் திகழ்ந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவ்வப்போது கிரிக்கெட் தொடர்பான தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார் சச்சின். அண்மையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஆதரவாக சச்சின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ-யின் 94வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ-யின் அடுத்த தலைவர் குறித்த விவாதங்கள் எழும். மேலும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் போட்டியின்றி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தத் தகவலை சச்சின் டெண்டுல்கர் தரப்பு மறுத்துள்ளது. தற்போது சச்சின் டெண்டுல்கரை எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பிசிசிஐ தலைவர் பதவிக்கு சச்சினின் பெயர் அடிபடுவதைத் தெரிந்து கொண்ட இந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், “பிசிசிஐ-யின் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தவறான செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த வதந்தி குறித்த தகவல்கள் எங்கள் கவனத்தை எட்டிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. பிசிசிஐ தலைவராக சச்சின் வர வேண்டும் என்பதற்கான எந்த முன்னெடுப்புகளும் இதுவரை நடகக்வில்லை. இது முற்றிலும் தவறான செய்தி. ஆதாரமற்ற செய்திகளுக்கும், யூகங்களுக்கும் யாரும் நம்பகத்தன்மை அளிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தரப்பில் பிசிசிஐ தலைவர் பதவி குறித்த தகவல் வதந்தி எனக் கூறப்பட்டதால், அடுத்த பிசிசிஐ தலைவர் யாராக இருப்பார் என்பதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கான விடை செப்டம்பர் 28இல் பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு தான் தெரியும் எனக் கூறப்படுகிறது.