
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், பிரபல மும்பை தொழிலதிபர் ரவி காய்யின் பேத்தி சானியா சந்தோக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், டெண்டுல்கர் குடும்பத்தினரோ அல்லது காய் குடும்பத்தினரோ நிச்சயதார்த்தத்தை உறுதிப்படுத்தவில்லை.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன். இவர் சச்சினுக்கு நேர் எதிர். அர்ஜுன் இடக்கை வேகப்பந்து வீச்சாளர், இடக்கை துடுப்பாட்டக்காரர். தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கரை எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வைத்துவிட வேண்டும் என்ற பெருங்கனவோடு இருந்த சச்சின் அதற்காக, மகன் பவுலராக விரும்பியதை தொடர்ந்து உலகம் முழுவதும் பவுலிங்கில் ஆளுமை செலுத்திய நட்சத்திர பவுலர்களான வார்னே, மெக்ராத், பொல்லாக், வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலரிடம் பயிற்சி எடுக்க வைத்தார்.
25 வயதான அர்ஜூன், உள்ளூர் கிரிக்கெட்டில் கோவாவுக்காக விளையாடும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் ஆவார், மேலும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது பவுலராக இருப்பதில் இருந்து தன்னை பேட்டிங் ஆல்ரவுண்டராக மாற்ற திட்டமிட்டு அதற்காக கடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் அர்ஜூன் டெண்டுல்கர்.
கிரிக்கெட்டில் சச்சினை போல், இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் அர்ஜுன் டெண்டுல்கர் வலம் வந்தாலும், என்ன தான் முயற்சி செய்தாலும் தன்னை போல் தன் மகனால் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியவில்லையே என்ற வருத்தம் சச்சினுக்கு இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் கிரிக்கெட்டில் பெரிய இடத்தை பிடிக்க முடியாத அர்ஜூன் டெண்டுல்கள் திருமணம் மூலம் பெரிய இடத்து பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார். மும்பையின் பிரபல தொழிலதிபரும், ஹாஸ்பிடாலிட்டி துறையில் கொடிகட்டிப் பறப்பவருமான ரவி காய் என்பவரின் பேத்தியான சானியா சந்தோக் என்பவரை தான் அர்ஜுன் டெண்டுல்கர் கைப்பிடிக்கப்போகிறார்.
ரவி காய், புகழ்பெற்ற இன்டர்காண்டினென்டல் ஹோட்டல் மற்றும் புகழ்பெற்ற குவாலிட்டி ஐஸ்கிரீம் பிராண்டின் (Kwality Ice Cream brand)உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சானியா சந்தோக், மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான 'மிஸ்டர் பாவ்ஸ்' (Mr Paws) என்ற சலூனை நிறுவி தனது தாத்தாவைப் போலவே ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் வலம் வருகிறார்.
மும்பையில் மிகவும் ரகசியமாக நடந்த அர்ஜூன் மற்றும் சானியாவின் நிச்சயதார்த்த விழாவில், இரு வீட்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிச்சயதார்த்தம் குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்போ அல்லது புகைப்படமோ டெண்டுல்கர் குடும்பத்தின் சார்பிலும், சானியா குடும்பத்தினர் சார்பிலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் வேகமாகப் பரவிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அர்ஜுன் - சானியா ஜோடிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தனது தந்தையை போல் கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் கடுமையாக போராடி வரும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு, இந்த நிச்சயதார்த்தம் மூலம் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒருபுறம் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் குடும்பம், மறுபுறம் தொழில்துறையில் பெரும்புள்ளியின் குடும்பம் என இந்த இரண்டு ஜாம்பவான்களும் திருமண பந்தம் மூலம் இணைவது, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பை சச்சின் குடும்பத்தினர் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.