Shakshi Malik.
Shakshi Malik.

மல்யுத்தத்திலிருந்து கண்ணீருடன் விலகினார் சாக்ஷி மாலிக்!

Published on

மல்யுத்த விளையாட்டிலிருந்து கண்ணீருடன் விலகுவதாக ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தனது அதிருப்தியையும் அவர்  வெளியிட்டார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் மீது சரமாரியாக பாலியல் புகார்கள் கூறப்பட்டன. அவருக்கு எதிராக மல்யுத்த வீர்ர், வீராங்கனைகள் விக்னேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஏராளமான பேர் போராட்டங்கள் நடத்தினர்.

இதையடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பை தற்காலிகமாக ஒரு குழு நிர்வகித்தது. நிர்ணயித்த காலத்திற்குள் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படாததால், இந்திய கூட்டமைப்புக்கு சர்வதேச கூட்டமைப்பு தடைவிதித்தது. இதனால் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இந்திய வீர்ர்கள் பங்கேற்க முடியாமல் போனது.

இந்த நிலையில் வியாழக்கிழமை (டிச.21) இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றிபெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அனிதாவுக்கு 7 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. துணைத் தலைவர் பதவி உள்ளிட்ட மொத்தம் உள்ள 15 பதவிகளில் 13 பதவிகளை பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து மல்யுத்த விளையாட்டிலிருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். மல்யுத்த வீர்ர்கள் சங்க கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ்பூஷன் குடும்பத்தினரோ அல்லது அவரது ஆதரவாளர்களோ போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உறுதியளித்திருந்தது. ஆனால், அப்படி நடக்கவில்லை. பிரிஜ்பூஷனின் வலதுகரமாக இருப்பவரே தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக எம்பி பிரிஜ்பூஷனுக்கு நீதிமன்றம் சம்மன்!
Shakshi Malik.

பிரிஜ்பூஷனை எதிர்த்து நாங்கள் 40 நாட்கள் போராட்டம் நடத்தினோம். பத்திரிகைகள் உள்ளிட்ட பலரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றி. பிரிஜ்பூஷன் ஆதரவாளர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அதிருப்தி அளிக்கிறது. எனவே மல்யுத்த விளையாட்டிலிருந்து நான் விலகுகிறேன்.

இதுவரை மல்யுத்த போட்டிகளில் நான் பெற்ற வெற்றி, விருதுகளுக்கு மக்கள் ஆதரவுதான் காரணம். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய மல்யுத்த வீர்ர்கள் கூட்டமைப்புக்கு பெண் தலைவராக இருந்தால் துன்புறுத்தல்கள் இருக்காது என்று நினைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை. இனி புதிய தலைமுறையினர்தான் இதற்காக போராட வேண்டும் என்றும் சாக்ஷி கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com