கடந்த வாரம் நண்பர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்கு சென்று இருந்தேன். கீழ்த்தளத்தில் திருமணம். முதல் தளத்தில் உணவு பரிமாறும் கூடம்.
திருமணம் முடிந்து விருந்து சாப்பிட சென்றபோது, கீழ்த்தளத்திலேயே ஒரு பக்கம் சிறிய பந்தி அமைக்கப்பட்டு டேபிள் சேர் இரண்டு வரிசைகள் மட்டும் தனியாக அமைக்கப்படிருந்தது. அதில் "முதியோர்களுக்கு மட்டும்" என்று பலகையில் எழுது வைக்கப்பட்டு முதியோர்களை மட்டும் முதலில் அங்கு அனுப்பி அமரவைத்தனர். உணவு பரிமாறினார்கள். ஏன் இப்படி என்று என் நண்பரிடம் கேட்டதற்கு அவர் ’’வயது முதிர்வு காரணமாக முதியோர்களுக்கு மூட்டு வலி, சர்க்கரை மற்றும் சில உபாதைகளால் படி ஏறிப்போய் சாப்பிட முடியாது. அதேபோல வரிசையில் நின்று இடம் பிடிப்பதும் கஷ்டம். அதை விட முக்கியானது இவர்கள் கொஞ்சம் மெதுவாக சாப்பிடுவார்கள்.
பொதுவாக பந்தியில் சாப்பிடும் மற்றவர்கள் வேகமாக சாப்பிட்டுவிட்டு அடுத்த பந்திக்ககாக இலையை மூடிச் செல்லும்போது இவர்கள் சங்கடத்துடன் சரியாக சாப்பிட முடியாமல் பாதியிலேயே இலையை மூடிவிட்டு செல்லவேண்டிய அவசியம் இருக்கும். அதனால்தான் இப்படி ஒரு ஏற்பாடு. ஆனால் இங்கு அவர்கள் தங்களுக்குத் தேவையானதை மெதுவாகச் சாப்பிட்டு விட்டு செல்ல முடியும். பெரியவர்கள் எந்தவித டென்ஷனும் இல்லாமல் பொறுமையாக சாப்பிட்டு செல்லவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்துள்ளோம்.
உண்மையில் இந்த ஏற்பாடு எனக்கு மட்டுமல்ல அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிடித்திருந்தது. முக்கியமாக முதியவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. நான் உட்பட அனைவரும் நண்பரை மனதாரப் பாராட்டினோம்.
இதை அனைவரும் பின்பற்றினால் நல்லதே.