
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம்தேதி தொடங்கியது. இந்த போட்டி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு 5 அணிகளுடன் தலா 2 முறையும், மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் என்ற கணக்கில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு குறைந்தது 7-8 வெற்றிகள் தேவையாகும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 23-ம்தேதி நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் இதே மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சிஎஸ்கே அணியும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. மொத்தத்தில் இந்திய முன்னாள் கேப்டன்கள் தோனி, விராட் கோலி நேருக்கு நேர் கோதாவில் குதிப்பதால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர், சிஎஸ்கே அணிக்காக முன்பு விளையாடியுள்ள ஷேன் வாட்சன், சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்...
"சேப்பாக்கத்துக்கு வரும் பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. சென்னையிடம் தரமான சுழற்பந்து வீச்சு உள்ளது. இங்கு, சென்னை அணியின் பலத்தை சமாளிப்பதற்கு ஏற்ப பெங்களூரு அணியினர் தங்களது ஆடும் லெவனில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக சிஎஸ்கே அணியிடம் உள்ள பந்துவீச்சாளர்களின் தரத்தைக் கருத்தில் கொண்டு, சிஎஸ்கேவின் பலத்தை எதிர்கொள்ள ஆர்சிபி அணி தங்கள் அணி அமைப்பை சரிசெய்ய வேண்டியிருக்கும்.
ஆனால் அதில் எந்த தவறும் செய்து விடக்கூடாது. இல்லையென்றால் சிக்கலாக மாறி விடும். ஏனெனில் சேப்பாக்கம், சென்னை அணியின் கோட்டை என்பதை மறந்து விட வேண்டாம்" என்று அவர் கூறினார்.
சென்னை அணியின் தரவரிசையில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதுதான் அவர்களின் சொந்த மைதானத்தில் அவர்களின் ஆதிக்கத்திற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார். இந்த சவாலான போட்டியில் RCB அணி களமிறங்குவதால், சென்னை அணியில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் அவர்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதில் அனைவரின் கவனமும் இருக்கும் என்று வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், "ஒட்டுமொத்த சென்னை அணியும் சேப்பாக்கம் ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் அற்புதமாக பந்து வீசினர். குறிப்பாக நூர் அகமது ஏற்படுத்திய தாக்கம் சென்னை அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கும். விக்கெட் வீழ்த்தும் ஒரு பவுலர் கிடைத்திருக்கிறார்" என்றார்.
தோனியின் தீவிர ரசிர்கள்களான மஞ்சள் படையின் ஆர்ப்பரிப்பும், விசில் சத்தமும் சென்னை வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் என்பது மறுப்பதற்கில்லை. அதுவும் கிரிக்கெட்டை பார்க்க வருபவர்களை விட தல தோனியை பார்க்க வரும் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம். எதுவாக இருந்தாலும் இந்த போட்டி நிச்சயமாக ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.