ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யோக்ராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். "ஸ்ரேயஸ் ஐயரை ஐபிஎல் தொடரில் இருந்து தடை செய்ய வேண்டும்" என்று ஆவேசமாகப் பேசிய யோக்ராஜ் சிங், அவரது ஆட்டத்தை "குற்றவியல் செயல்" என்று வர்ணித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் 191 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். ரோமாரியோ ஷெப்பர்ட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறிய விதம், பஞ்சாப் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இது குறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய யோக்ராஜ் சிங், "ஸ்ரேயஸ் ஐயர் இறுதிப் போட்டியில் ஆடிய அந்த ஷாட் என் பார்வையில் ஒரு குற்றவியல் செயல். அசோக் மங்கட் எனக்கு இந்த குற்றவியல் செயல் பற்றி சொன்னார். இது சட்டப்பிரிவு 302ன் கீழ் வரும். இதன் விளைவாக, அவருக்கு இரண்டு போட்டிகளில் தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் என்னிடம் கூறினார். ஸ்ரேயஸ் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த ஷாட்டிற்காக எந்த மன்னிப்பும் இல்லை" என்று ஆவேசமாகக் கூறினார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு வந்ததற்கு ஸ்ரேயஸ் ஐயரின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தகுதிச் சுற்று 2 போட்டியில் அவர் 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மிக முக்கியமான இறுதிப் போட்டியில் அவரது பொறுப்பற்ற ஆட்டம், யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங்கை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
ஸ்ரேயஸ் ஐயரின் இந்த ஆட்டம், சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.