உடல் வலிமையாகவும், எடையைக் குறைக்கவும் உடற்பயிற்சி அவசியம் என்றாலும், எந்த ஒரு விஷயமும் அளவுக்கு மீறினால் நன்மையை விட தீமையே அதிகம் என்பது உடற்பயிற்சிக்கும் பொருந்தும். குறிப்பாக, விரைவான பலன்களைப் பெற வேண்டும் என்ற ஆசையில், சிலர் தங்கள் உடல் திறனுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுகிறார்கள். இது நன்மையை விட, எதிர்பாராத உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பதிவில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது உடல் நலத்திற்கு எவ்வாறு கேடு விளைவிக்கும் என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது, உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்வதற்கான போதுமான ஓய்வு நேரம் கிடைப்பதில்லை. இதனால், தசைகளில் வீக்கம், வலி, அதிக சோர்வு, பலவீனம் மற்றும் காயம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது மட்டுமல்லாமல், அதீத உடற்பயிற்சி காரணமாக ஹார்மோன் சமநிலையின்மையும் ஏற்படலாம். இதன் விளைவாக, தூக்கமின்மை, மன எரிச்சல், மற்றும் அசாதாரண இதயத் துடிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். ஏற்கனவே சில உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு, அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.
உடற்பயிற்சி செய்யும்போது சில விஷயங்களை மனதில் கொள்வது அவசியம். உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம். சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது மற்றும் போதுமான அளவு தூங்குவது மிகவும் அவசியம். இந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், உடற்பயிற்சி செய்தால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். தசைகள் வலுவடையவும், வளர்ச்சி அடையவும் புரதமும், போதுமான ஓய்வும் தேவை. இது இல்லாவிட்டால் தசைகள் பலவீனமடையக்கூடும்.
நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால், உங்கள் இதயத் துடிப்பு இயல்புக்கு மாறாக அதிகரித்திருந்தால், அல்லது உங்கள் தூக்கம் பாதிக்கப்பட்டிருந்தால், இவை நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவர் அல்லது உடற்பயிற்சி பயிற்சியாளரை அணுகுவது நல்லது. ஒரு நிபுணருடன் கலந்துரையாடி, உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சி முறை மற்றும் நேரத்தைத் தீர்மானிப்பது பாதுகாப்பானது.
பொதுவாக, ஒரு சாதாரண நபருக்கு ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரையிலான மிதமான உடற்பயிற்சி போதுமானது. இது அவரவர் உடல்நிலை மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடும். தடகள வீரர்கள், பாடி பில்டர்களுக்கு மட்டுமே கூடுதல் நேரம் உடற்பயிற்சி தேவைப்படும்.
உடற்பயிற்சி என்பது உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் ஒரு கருவி. எனவே, இணையத்தில் உள்ள வீடியோக்களை மட்டும் நம்பி உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றாமல், உங்கள் உடல் தேவைகளைப் புரிந்துகொண்டு, நிபுணர்களின் ஆலோசனையுடன் செயல்படுவது மிகவும் முக்கியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)