ஐ.பி.எல் 2024: குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் பகிர்ந்து கொண்டது!

Shubman Gill
Shubman Gill

ஐ.பி.எல் 2024 போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கபட்டுள்ளதை அடுத்து சுப்மன் கில் உற்சாகமாக இருக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தாம் முன்னர் விளையாடிய மும்பை இண்டியன்ஸ் அணிக்கு திரும்பியதை அடுத்து புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சுப்மன் கில், நண்பர்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விடியோ மூலம் விடுத்துள்ள செய்தியில், “கிரிக்கெட் வாழ்க்கை பயண முதல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது வரையிலான பயணத்தை விவரித்துள்ளார். தமது இளம் வயது கனவு நனவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் விசுவாசத்திற்கு கிடைத்த வெற்றிதான் தலைமைப் பதவி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திறமையான தலைவர்களின் கீழ் விளையாடிய அனுபவத்தை விவரித்த அவர், சில பாடங்களை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தாம் பெற்ற அனுபவங்களையும், கற்ற பாடங்களையும் புதிய பணியில் செயல்படுத்த போவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமது அணியில் கானே வில்லியம்சன், ரஷீத் கான், முகமது ஷாமி, டேவிட் மில்லர் போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் உள்ளதாகவும், அவர்களும் வழிகாட்டுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நான் 8 வயது சிறுவனாக இருக்கும்போது ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கின. கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு ஐ.பி.எல் போட்டியில் விளையாட வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதேபோல ஐ.பி.எல் போட்டியிடும் வீரர்களுக்கு கேப்டனாக வேண்டும் என்ற கனவு இருக்கும். இப்போது எனது கனவு நிறைவேறியிருக்கிறது. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று அந்த விடியோ பதிவில் சுப்மன் கில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
டி20 உலக கோப்பை: டிராவிடை தொடர்ந்து ரோகித் சர்மாவுக்கு வலைவீசும் பி.சி.சி.ஐ!
Shubman Gill

மிகுந்த பொறுப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் தமது கேப்டன் பதவிக்காலத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். முந்தைய சீசன்களில் வெற்றியை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணியை அதே உற்சாகத்துடனும் துடிப்புடனும் கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும் கூறினார்.

“ஒரு அணிக்கு கேப்டனாக வந்துவிட்டால் உடனே பொறுப்பும் வந்துவிடுகிறது. பொறுப்பு இருந்தால் மட்டும் போதாது ஒழுங்கு முக்கியம். அத்துடன் கடின உழைப்பும் தேவை, எல்லாவறுக்கும் மேலாக அணியே நேசிக்க வேண்டும். நான் பல மூத்த தலைவர்களின் கீழ் விளையாடியுள்ளதால் பல பாடங்களை கற்றுள்ளேன். அந்த பாடங்களும், அனுபவமும் இப்போது எனக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறேன்" என்றார் சுப்மன் கில்.

தனது பேட்டிங் திறமை, அறிவாற்றல் ஆகியவற்றின் மூலம் புதிய கேப்டன் சுப்மன் கில், குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னிலைக்கு கொண்டு வருவார். ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com