மேற்குவங்கத்தில் டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணியின் போது, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகம்மது கைப் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும், மேலும் அவர்கள் அளித்த தகவல்கள் போதுமானதாக இல்லாததால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. குறிப்பாக, குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல் மற்றும் சுயவிவரத் தகவல்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டபோதும், விவரங்கள் போதுமானதாக இல்லை என ஒரு கோடி பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி தொகுதியின் கீழ் வரும் வார்டு எண் 93-ல் ஷமி ஒரு வாக்காளராகப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்காக, கடந்த ஜனவரி 5-ம்தேதி ஆஜராகுமாறு அவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ராஜ்கோட்டில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது என ஷமி தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்திருந்தார்.
ஷமியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதன்படி, கொல்கத்தாவில் வாக்குரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமி, உரிய ஆவணங்களுடன் 9-ம்தேதியில் இருந்து 11-ம்தேதிக்குள் வாக்குச்சாவடியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகமது ஷமி, உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் பிறந்தவர் என்றாலும், கிரிக்கெட் விளையாட்டிற்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. முகமது ஷமியின் சகோதரர் முகமது கைப்க்கும் சம்மன் அனுப்பட்டுள்ளது.