
இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் மிக முக்கியமானவர் முகமது ஷமி. இவரின் பந்து வீச்சு இந்திய அணிக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது என்பதை மறக்கமுடியாது.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு ஆண்டாக விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் கடந்தாண்டு ரஞ்சிக் கோப்பை போட்டியில் கலந்து கொண்டு தனது முழு உடல் திறனை நிரூபித்த முகமது ஷமி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் களம் இறங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கம் பேக் கொடுத்தது மட்டுமில்லாமல் பும்ரா இல்லாத குறையை தீர்த்து இந்திய அணியின் பௌலிங்கை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா வங்காளதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் 34 வயதான முகமது ஷமி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி பல்வேறு வரலாற்று சாதனைகளையும் படைத்துள்ளார்.
* இந்தியா தரப்பில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர்களில் 53 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது 6-வது முறையாகும்.
* முகமது ஷமி இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் ஒரு நாள் போட்டியில் அவரது விக்கெட் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்தது. இதன் மூலம், 200 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய 2-வது பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
* 5,126 பந்துகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் குறைந்த பந்தில் வேகமாக 200 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி சாதனையாளராக மகுடம் சூடியுள்ளார்.
* 50 ஓவர் ஐ.சி.சி. போட்டி தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை ஜாகீர்கானிடம் (59 விக்கெட்) இருந்து முகமது ஷமி (60 விக்கெட்) தட்டிப்பறித்து முதலிடத்தை பிடித்துள்ளார். முகமது ஷமி முதல் இடத்திற்கு முன்னேறியதால் ஜாகீர்கான் இரண்டாவது இடத்திலும், ஜவகல் ஸ்ரீநாத் 47 விக்கெட்டுகளை எடுத்து 3-வது இடத்திலும், ஜடேஜா - 43 விக்கெட்டுகளை எடுத்து 4-வது இடத்திலும் உள்ளனர்.
*முகமது ஷமி இதுவரை 156 கேட்ச் பிடித்துள்ளார். பீல்டராக அதிக கேட்ச் பிடித்த இந்தியரான முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை சமன் செய்தார்.
வங்காளதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முகமது ஷமி பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார். இனிவரும் ஆட்டங்களிலும் முகமது ஷமி பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.