2025 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.நேற்று அக்டோபர் 12 , அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா புதிய உலக சாதனைகளை படைத்தார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை , ஒரு காலண்டர் ஆண்டுக்குள் கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார் , மேலும் ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த சாதனையையும் எட்டினார்.
மேலும் அவர் இன்னும் ஒரு மாபெரும் சாதனையையும் இந்த போட்டியில் செய்துள்ளார். 2025-ஆம் ஆண்டில் 1000 ரன்களை எட்ட அவருக்கு 18 ஒருநாள் போட்டிகளே தேவைப்பட்டது. நேற்றைய போட்டியின் போது இந்த சாதனையை எட்ட 18 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டி இருந்தது. ஆஸ்திரேலியச் சுழற்பந்து வீச்சாளர் சோஃபி மோலினக்ஸ் வீசிய எட்டாவது ஓவரின் , 3 வது பந்தில் ஒரு சிக்சர் அடித்து அதிரடியாக இந்த சரித்திர சாதனையை செய்தார். மேலும் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 66 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அரைசதம் கடந்தார்.
1997-ஆம் ஆண்டில் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் பெலிண்டா கிளார்க் , ஒரு காலண்டர் ஆண்டில் 970 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். இதுவரை அவர் எடுத்த 970 ரன்களே , ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு வீராங்கனை எடுத்த அதிகபட்ச ரன்களாக 28 வருடங்கள் தொடர்ந்தது. இந்த பழமையான சாதனையை உடைத்து புதிய வரலாற்றை படைத்துள்ளார் ஸ்மிருதி, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் எட்டிய வீராங்கனைகளின் பட்டியலில், ஸ்மிருதி இப்போது முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்களை குவித்தவர்கள்:
1. ஸ்மிருதி மந்தனா (இந்தியா-2025 ): 1003* ரன்கள் (18 போட்டிகள்)
2.பெலிண்டா கிளார்க் (ஆஸி -1997): 970 ரன்கள் (16 போட்டிகள்)
3.லாரா வோல்வார்ட் (தெ.ஆப்பிரிக்கா-2022): 882 ரன்கள் (18 போட்டிகள்)
5000 ரன்களை கடந்து சாதனை:
இந்தப் போட்டியில் 58 ரன்களை ஸ்மிருதி கடந்த போது மேலும் ஒரு முக்கியமான உலக சாதனையை படைத்தார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், 5000 ரன்களை கடந்த வீராங்கனைகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்தார். இதற்கு முன் 5000 ரன்களை எட்டிய மற்றவர்களை விட குறைந்த போட்டிகளில் அவர் இந்த இலக்கை எட்டியுள்ளார்.
இதுவரை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்களைகளில் நான்கு பேர் மட்டுமே 5000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் பட்டியலில், அதிக ரன்களை கடந்து, இந்தியாவின் மிதாலி ராஜ் 7805 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த சார்லோட் மேரி எட்வர்ட்ஸ் 5992 ரன்களுடன் 2 வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் 5925 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.