
விளையாட்டுத் துறையில் பல்வேறு முன்னேற்றங்களை சந்தித்து வரும் தமிழ்நாடு, கடந்த சில ஆண்டுகளில் பல வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு தயார் செய்துள்ளது. இந்நிலையில் மின்னணு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக வெகுவிரைவில் சென்னையில் இ-ஸ்போர்ட்ஸ் திருவிழா நடைபெற உள்ளது. இந்தத் திருவிழா விளையாட்டுத் துறையில் மாபெரும் புரட்சியாக இருக்கப்போகிறது. இதன் மூலம் வரும் ஆண்டுகளில் இ-ஸ்போர்ட்ஸ் தலைநகராக தமிழ்நாடு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து இ-ஸ்போர்ட்ஸ் திருவிழாவை நடத்த உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பிரம்மாண்டமான ‘சென்னை இ-ஸ்போர்ட்ஸ் குளோபல் சாம்பியன்ஷிப்’ வருகின்ற நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இ-ஸ்போர்ட்ஸ் திருவிழாவிற்காக ரூ.4.54 கோடியை ஒதுக்கியுள்ளார்.
இ-ஸ்போர்ட்ஸ் திருவிழா சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டாரங்கில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு திருவிழாவில் வீடியோ கேம்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் நடந்து வரும் முதலமைச்சர் கோப்பை 2025-இல் இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளும், ஒரு முழு அளவிலான போட்டிகளாக சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதிலும் இருந்து இ-ஸ்போர்ட்ஸ் திருவிழாவில் 200 சர்வதேச அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நடைபெற உள்ள இ-ஸ்போர்ட்ஸ் திருவிழாவின் மூலம், தெற்காசியாவின் வளர்ந்து வரும் இ-ஸ்போர்ட்ஸ் தலைநகரமாக சென்னை உருவெடுக்கும். இ-ஸ்போர்ட்ஸ் திருவிழாவில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறும் வீரருக்கு, பதக்கத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க தொகை பரிசாக வழங்கப்படும்.
முதலமைச்சர் கோப்பையில் சேர்க்கப்பட்ட இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளில் பங்கேற்க தமிழக முழுக்க 4500-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். இதன்படி இ.ஏ., எப்.சி.- 25, போக்கிமொன் யுனைட், ஸ்ட்ரீட் பைட்டர்ஸ், மின் செஸ் மற்றும் பி.ஜி.எம்.ஐ., வாலரண்ட் உள்ளிட்ட 6 வகையான இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு இணையாக இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது உலகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்தாண்டு வரை இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகள் தமிழ்நாட்டில் சோதனை முயற்சியாக மட்டுமே இருந்தது. ஆனால் நடப்பாண்டில் சர்வதேச அளவிலான இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளை நடத்தும் மாபெரும் புரட்சியை தமிழகம் மேற்கொண்டுள்ளது.