
குப்பை மேடுகளிலும், தெரு ஓரங்களிலும் வளர்ந்திருக்கும் குப்பைமேனி செடியை நம்மில் பலரும் கண்டு கொள்ளாமலே இருக்கிறோம். ஆனால் அத்தகைய குப்பைமேனி செடியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. அதன் பாகங்கள் அனைத்துமே மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதன்படி குப்பைமேனியின் சாறு தினசரி குடித்து வந்தால், வறட்டு இருமல், தொண்டை வலி, சளி போன்ற நோய்கள் உடனடியாக குணமடையும்.
அதேபோல குப்பைமேனி இலையின் சாற்றை ஒரு ஸ்பூன் வெண்ணீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் குணமடைந்து, வயிற்றில் உள்ள புழுக்களும் வெளியேறும். இதன் பொடியை விளக்கெண்ணையில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் அடியோடு அழிந்துவிடும்.
குப்பைமேனி இலைச்சாறை தினசரி குடிப்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், சைனஸ் தொல்லையில் இருந்தும் விடுபடலாம். ரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களும் குணமாகும். குறிப்பாக சொத்தை பல் உள்ளவர்கள் குப்பைமேனி இலைகளை நன்றாகக் கழுவி விரலில் நசுக்கி சொத்தை பல்லில் வைத்தால், அதில் உள்ள கிருமிகள் நீங்கி, வலியிலிருந்து விடுபடலாம்.
நீண்ட நாட்கள் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு படுக்கை புண் ஏற்படும். அத்தகைய புண் குணமடைய குப்பைமேனி இலையில் விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து புண்ணில் தடவினால் ஆறிவிடும். மேலும் அரிப்பு, படை போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் கல் உப்பு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை அரைத்துத் தடவினால், தோல் நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
விஷப்பூச்சிகள், பூரான், தேள் போன்றவை கடித்தாலும் குப்பைமேனி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் தடவி வந்தால், விஷத்தின் வீரியம் குறையும். இப்படி இந்த ஒரே இலை பல பிரச்சினை களுக்கு தீர்வாக இருக்கிறது. இதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களது வீட்டின் அருகிலேயே சர்வ சாதாரணமாகவே இந்த குப்பைமேனி செடிகள் வளர்ந்திருக்கும்.