

நியூ ராய்ப்பூரில் உள்ள சர்வதேச மைதானத்தில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய , 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா இந்த மேட்சிலும் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன் மூலம் இதுவரை இந்திய அணி தொடர்ச்சியாக 20 மேட்ச்களில் டாசை இழந்து வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது.
வழக்கம் போல் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வாலும் , ரோஹித் ஷர்மாவும் களமிறங்கி நிதானமாக விளையாடத் தொடங்கினர். அதிரடியை கடைப்பிடித்த ரோஹித் ஷர்மா 14 ரன்களில் நன்ட்ரே பார்க்கர் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து விராட் கோலி களமிறங்கி தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம்
ஜெய்ஸ்வால் சோபிக்காமல் 22 ரன்களில் மைதானத்திற்கு திரும்பினார். இந்நிலையில் விராட்டுடன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சேர்த்து ரன்மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர். விராட்டை விட மிகவும் அதிரடியாக கெய்க்வாட் விளையாடினார்.
இந்த ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை பிய்த்து எடுத்தது. முதலில் கெய்க்வாட் 2 சிக்சர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை அடித்து சதத்தினை கடந்தார் , 83 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் விராட்டுடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல்(66) கடந்த மேட்ச்சை போலவே , இந்த மேட்சிலும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து , இறுதி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார்.
வீராட் இந்த போட்டியில் தனது 53 வது சதமடித்து 102 ரன்களில் வெளியேறினார். ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில், முதலிடத்தில் உள்ள விராட்டின் சாதனையில் மேலும் ஒன்று சேர்ந்துள்ளது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்களை குவித்திருந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் மார்கோ ஜான்சன் அதிக பட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இமாலய ஸ்கோரை நோக்கி விரட்டலை தொடங்கிய தென் ஆப்பிரிக்க நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. ஏய்டன் மார்க்ரம் சிறப்பான துவக்கத்தை ஆரம்பித்தார். மறுபுறம் குயிண்டன் - டி - காக் 8 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சேர்ந்த பவுமா , மார்க்ரம் உடன் சேர்ந்து வலுவான ஸ்கோரை நோக்கி ஆட்டத்தை நகர்த்தினார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை 127 க்கு கொண்டு சென்றது. பவுமா 46 ரன்களில் வெளியேற , மேத்யூ பிரிட்ஸ்கி மார்க்ரமுடன் சேர்ந்து ஒத்துழைப்பு கொடுத்தார்.
இந்திய அணியின் வெற்றிக் கனவை சிறிது சிறிதாக மார்க்ரம் கலைத்துக் கொண்டிருந்தார். சதமடித்து மிரட்டிய மார்க்ரமை (110) ஹர்ஷித் ராணா பந்தில் கெய்க்வாட் கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அதன் பின்னர் பிரிஸ்கி(68) மற்றும் பிரேவிஸ்ஸின் அதிரடி இந்திய அணியை கலங்க வைத்தது. 33 பந்துகளில் 54 ரன்கள் அடித்து துவைத்த பிரேவிஸ்ஸை குல்தீப் யாதவ் அவுட்டாக்கினார்.
ஒருபுறம் விக்கட்டுகள் போனாலும் ரன் ரேட் அதிகரித்த வண்ணமே இருந்தது. பாஷ் (29) மற்றும் கேசவ் மகராஜ்(10) ஜோடி , 49.2 ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி பெற வைத்தது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. தொடரை நிர்ணயிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டி , டிசம்பர் 6 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.