வேகப் பனிச்சறுக்கு (Speed Skating) வீரர் ஆனந்த்குமார் வேல்குமார், கடந்த செப்டம்பர் 15 அன்று, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றை உருவாக்கியுள்ளார். 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில், இத்தாலியின் டியூசியோ மார்சிலியை வீழ்த்திய ஆனந்த்குமார், பந்தய தூரத்தை வெறும் 1 நிமிடம், 24 வினாடிகள், 924 மில்லி வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி, பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "வேகப் பனிச்சறுக்கு உலக சாம்பியன்ஷிப் 2025-ல் ஆடவர் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் தங்கம் வென்ற ஆனந்த்குமார் வேல்குமாருக்குப் பெருமை.
அவரது விடாமுயற்சி, வேகம் மற்றும் மன உறுதி ஆகியவை அவரை இந்தியாவின் முதல் பனிச்சறுக்கு உலக சாம்பியனாக மாற்றியுள்ளன. அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும். அவருக்கு வாழ்த்துகள், எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.
ஆனந்த்குமார் தனது இந்த தங்கப் பதக்கத்திற்கு ஒரு நாள் முன்னதாக, 500 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் 43.072 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இதே சாம்பியன்ஷிப் போட்டியில், இளையோர் பிரிவில் கிருஷ் ஷர்மாவும் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் தங்கம் வென்றது, இந்தியாவுக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்தது.
சாதனைகளின் வரிசை
ரோலர் விளையாட்டுகளில் சர்வதேச அளவில் படிப்படியாக தனது முத்திரையைப் பதித்து வரும் ஆனந்த்குமார், இந்த இரண்டு பதக்க வெற்றிகளுக்கு முன்னர் பல்வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், செங்டுவில் நடந்த உலக விளையாட்டுப் போட்டிகளில் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2023-ல் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 3000 மீட்டர் ரிலே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் ஆனந்தகுமார் இடம் பெற்றிருந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இளையோர் உலக சாம்பியன்ஷிப்பில் 15 கி.மீ. எலிமினேஷன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.