சுறு சுறுப்புத் திலகமாக்க…சூப்பர் ஆயில்பாத்!

சுறு சுறுப்புத் திலகமாக்க…சூப்பர் ஆயில்பாத்!

காலையில் எழும் போதே உறக்கம் கலையாமல் உடல் சோர்வு அதிகமாக உள்ளதா? சாப்பாட்டைப் பார்த்தால் மருந்துபோல் கசக்கிறதா? உடல் வறட்சியாகவும், சருமம் ஈரப்பதம் அற்றும் காணப்படுகிறதா? கை கால் குடைச்சல் ஏற்பட்டு அடிக்கடி வலிக்கிறதா? கவலை வேண்டாம், ஆரம்பத்திலேயே குணப்படுத்த, பின் வரும் குறிப்பைச் செய்து பாருங்கள்.

நல்லெண்ணெய் 50 மில்லி, விளக்கெண்ணெய் 50 மில்லி, நெய் 25 மில்லி எடுத்து மூன்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதிக்கும் போது ஒரு சிறிய துண்டு விரலி மஞ்சளைப் பொடித்தும், 2 கிராம் பூண்டுப் பல்லைத் தட்டிப்போட்டும் எண்ணெயை இறக்கி விடவும்.

இந்த எண்ணெயை விடியற்காலை 4-6 க்குள் இலேசாகச் சூடுபடுத்திப் பிடறி, நெஞ்சு, அடிவயிறு, இடுப்பு மூட்டுகளில் நன்கு தேய்த்து 1 மணி நேரம் ஊறி வெது வெதுப்பான நீரில் குளித்து வரவும். இப்படி முப்பது நாள் குளித்தாலே போதும், உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இயங்க முடியும்.  மந்தத்தன்மை மாறி நன்றாகப் பசிக்கும்.

குளித்தவுடன் பசி தாங்க முடியாது. அதற்கு கருப்பு உளுந்தை முதல் நாளே ஊறவிட்டு, விடியற்காலையில் அது ஊறிய தண்ணீரிலேயே அரைத்து போதுமான அளவு நீர் விட்டு பாயசம் போல் காய்ச்சி அதில் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து, தேங் காய்த் துருவலைச் சேர்த்து நன்கு காய்ச்சி இறக்கிக் குடிக்கவும்.

இதை செய்ய முடியாத போது மாதுளை முத்துக்களை உதிர்த்து இளஞ்சூடான நீரில் போட்டு, மிக்ஸியில்  அடித்து, வடிக்கட்டிய பின்  குடிக்கவும். துவர்ப்புச் சுவை மிகவும் நல்லது.

மூன்றாவதாக முதல் நாள் இரவில் காம்புடன் நறுக்கிய முருங்கைக்கீரை 300 கி, மிளகு 15 கி, சீரகம் 10 கி, கசகசா 10 கி, சின்ன வெங்காயம் 50 கி, பச்சை மிளகாய் 1 அனைத்தையும் இடித்து அரிசி களைந்த நீரில் வேக வைத்து குளித்தவுடன் குடித்து வரவும்.

இதனால் இரும்புச்சத்து குறைபாடு, கண் பார்வைக் குறைபாடு நீங்கும். மேற்சொன்ன மூன்று குறிப்புகளில் ஏதாவது ஒன்றை குளித்தவுடன் குடித்து வருவது அவசியம்.

கவனிக்க:-

இந்த எண்ணெயை இரவு உறங்கும் போது உள்ளங்கால் களிலும் வெடிப் புப் பகுதியிலும் தேய்த்துக் கொண்டு உறங்க, வெடிப்புகள் நீங்கும்.

வாரம் இரண்டு நாள் எண்ணெய்க் குளியல் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

மந்தத்தைப் போக்கி பசியைத் தூண்டும். எப்பொழுதுமே  உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

சரும வறட்சி மாறி பளபளப்பு கூடி யிருப்பதை உணர முடியும். கை கால் மூட்டு வலி யெல்லாம் காணாமல் போகும்.

இந்த எண்ணெய் குளியல் முடியும் காலகட்டம் வரை புளித்தமாவில் செய்த உணவு வகைகளை காலை உணவாகக் கொள்வதைத் தவிர்ப்பது நலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com