சுரேஷ் ரெய்னாவின் ஐடியா… என்ன செய்யப் போகிறார் ரோஹித் ஷர்மா?

Suresh Raina
Suresh Raina

நாளை முதல் உலகமுழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியில் உள்ள வீரர்களைப் பற்றி பேசியுள்ளார். மேலும் ரெய்னா ஒரு ஐடியாவும் கூறியிருக்கிறார்.

உலகக்கோப்பை தொடர் நாளை முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் முதல் போட்டி அமெரிக்காவில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்தவுடன், நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெறும். அந்தவகையில் எந்தெந்த அணிகள் அரையிறுதி போட்டிகளுக்குச் செல்லும் என்று பலரும் பல கருத்துக்களை கூறிவருகின்றனர்.

டி20 இந்திய அணியில், கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சப்ஸ்ட்டிட்யூட் வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் வீரர்களைப் பற்றி பேசியிருக்கிறார், “என்னைப் பொறுத்தவரை நம்பர் 3 வரிசையில் விராட் கோலியை தான் விளையாட வைக்க வேண்டும். அவரின் பேட்டிங் வரிசையில் எந்த மாற்றத்தையும் செய்ய கூடாது. இந்திய அணியின் ரன் மெஷின் எப்போதும் விராட் கோலி தான். ஐபிஎல் தொடரிலேயே சிறந்த ஃபார்மில் இருந்தார். அதேபோல் ஜெய்ஸ்வாலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். தொடக்க வீரராக நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இளம் வீரராக இருப்பதால், ஜெய்ஸ்வால் கொஞ்சம் கூட அச்சமில்லாமல் பேட்டிங் செய்கிறார். அதேபோல்தான் சிவம் துபே. இந்திய அணி நிர்வாகம் அவரை எப்படியாவது பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் சிவம் துபேவிடம் இருக்கும் சிக்சர் அடிக்கும் திறமை அரிதானது. முன் காலத்தில் சிவம் துபேவை போல் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இருந்தனர்.

இதையும் படியுங்கள்:
India Pakistan Match: தீவிரவாத தாக்குதல் நடைபெறும் – வெளியான தகவலால் பகீர்!
Suresh Raina

இந்திய அணியின் ட்ரம்ப் கார்ட் சிவம் துபே தான். இதனால் கேப்டன் ரோகித் சர்மா தான் அந்த கடினமான முடிவை எடுக்க வேண்டும். ஏனென்றால் சிவம் துபே இருந்தால் கூடுதலாக 20 முதல் 30 ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடியும்.” என்று பேசியிருக்கிறார்.

ஆனால், ரோஹித் ஷர்மா என்ன ஐடியா வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆகையால், இந்தியா விளையாடும் போட்டி வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com