குவியும் பாராட்டுக்கள்..!! தனது ஆசிய கோப்பை ஊதியத்தை ராணுவ வீரர்களுக்கு வழங்கிய இந்திய வீரர்!

Suryakumar yadav
Suryakumar yadav
Published on

துபாயில் நடந்த ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், கோப்பையை பெற்றுக்கொள்ளவில்லை. போட்டியின் வெற்றியை விட, பரிசளிப்பு விழாவில் இந்தியா நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது அணியின் வெற்றியைத் தொடர்ந்து ஒரு உணர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார். இத்தொடரில் தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளின் ஊதியத்தையும் இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அவர் அறிவித்தார். பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இந்த நிதி பயன்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், "தனிப்பட்ட முறையில், இந்தத் தொடரில் (அனைத்துப் போட்டிகளிலும்) இருந்து நான் பெறும் ஊதியம் அனைத்தையும் இந்திய ராணுவத்திற்கு வழங்க விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவராகவும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும் உள்ள மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்துவிட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டிக்குப் பிறகு, கோப்பையின்றி இந்திய வீரர்கள் மைதானத்தில் கொண்டாடியது கிரிக்கெட் அரங்கில் இதுவரை காணாத ஒரு நிகழ்வாக மாறியது.

இதையும் படியுங்கள்:
வரலாறு படைத்த ஷீதல் தேவி: 2025 உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள்..!
Suryakumar yadav

தாமதமாகத் தொடங்கிய பரிசளிப்பு விழாவில், தனிப்பட்ட வீரர்களுக்கான விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டன. மொஹ்சின் நக்வி மேடையிலேயே இருந்தபோதிலும், இந்திய அணி கோப்பையை அவரிடமிருந்து ஏற்க மறுத்ததால், கோப்பை யாருக்கும் வழங்கப்படாமல் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது.

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் காலித் அல் ஜாரூனியிடம் இருந்து கோப்பையை ஏற்க இந்திய வீரர்கள் தயாராக இருந்தனர், ஆனால் இதற்கு நக்வி அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது.

பரிசளிப்பு விழாவின் குழப்பம் குறித்துப் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். "நான் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கி, விளையாடத் தொடங்கிய பிறகு, சாம்பியன் அணிக்கு கோப்பை மறுக்கப்படுவது இதுவே முதல் முறை. இது எளிதில் கிடைத்த வெற்றி அல்ல; கடினமாகப் போராடி வென்ற தொடர். நாங்கள் இங்கு நான்காம் தேதி முதல் இருந்து, தொடர்ந்து இரண்டு சிறந்த ஆட்டங்களை விளையாடினோம். நாங்கள் இதற்குத் தகுதியானவர்கள் என்று உணர்கிறேன். இதைவிட நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை." என்றார்.

இதையும் படியுங்கள்:
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது இந்தியா..!!
Suryakumar yadav

மேலும், "கோப்பைகளைப் பற்றி என்னிடம் சொன்னால், எனது டிரஸ்ஸிங் ரூமில் எனது கோப்பைகள் இருக்கின்றனர். ஆம்! அந்த 14 வீரர்களும், அனைத்து உதவியாளர்களும் தான் உண்மையான கோப்பைகள். ஆசிய கோப்பை பயணத்தில் முழுவதும் அவர்களை நான் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறேன். அவர்கள்தான் உண்மையான கோப்பைகள், நிஜமான நினைவுகள், அவை என்னுடன் என்றென்றும் நிலைத்திருக்கும்." என்றும் சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com