
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடும் இந்திய அணி, லீக் சுற்றில் ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், ஓமன் அணிகளை தோற்கடித்து 3 வெற்றிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசத்தை தெறிக்கவிட்டது.
அதேபோல் பாகிஸ்தான், நடப்பு தொடரில் இந்தியாவுடன் 2 முறை உதை வாங்கி இருப்பதாலும், கைகுலுக்காததால் உருவான களேபரம், சமீபகாலங்களில் இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் நிகரான அணியாக பாகிஸ்தான் இல்லை போன்ற விமர்சனங்களாலும் அந்த அணியினர் மனதுக்குள் கொந்தளித்து போய் இருந்தனர்.
அந்த உக்கிரத்துடன் முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் சண்டையை பார்க்க இவ்விரு அணிகளின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
துபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெற்ற மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டின.
இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு சகிப்சதா பர்ஹானும், பஹர் ஜமானும் சிறப்பான தொடக்கம் தந்து பவர்-பிளேயில் (6 ஓவர்) 45 ரன்கள் திரட்டினர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 180-190 ரன்கள் வரை எடுக்கும் என்றே தோன்றியது.
ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. இவர்கள் கூட்டணியில் ஸ்கோர் 84-ஆக (9.4 ஓவர்) உயர்ந்த போது சகிப்சதா வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய சைம் அயூப் 14 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து பஹர் ஜமான் 46 ரன்னில் வெளியேற, அதன் பின்னர் வந்த எந்த வீரரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதில் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், ஷகீன் ஷா அப்ரிடி ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் சல்மான் ஆஹா 8 ரன்னிலும், ஹூசைன் தலாத் 1 ரன்னிலும் ஆவுட்டாகி வெளியேறினர்.
பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதனை தொடர்ந்து 147 ரன் இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அபிஷேக் ஷர்மா 5 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து நுழைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 12 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி 20 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் நெருக்கடிக்குள்ளானது.
அதனை தொடர்ந்து களம் இறங்கிய திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்ட நிலையில் 24 ரன்னில் சஞ்சு சாம்சன் வெளியேற அடுத்து திலக் வர்மாவுடன், ஷிவம் துபே கைகோர்த்தார்.
கடைசி 2 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரில், ஷிவம்துபே 33 ரன்னில் விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பரபரப்பான இறுதி ஓவரில் 10 ரன் தேவையாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் கடைசி ஓவரில் பந்து வீச முதல் பந்தில் 2 ரன் எடுத்த திலக் வர்மா, அடுத்த பந்தை சிக்சருக்கும், 3-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். 4-வது பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங், பவுண்டரிக்கு விரட்டி தித்திப்பாக ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தக்க வைத்தது. திலக் வர்மா 69 ரன்களுடனும், ரிங்கு சிங் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியா 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கம்பீரமாக கோப்பையை முத்தமிட்டு இருக்கிறது. பாகிஸ்தானையும் 3 முறை போட்டுத்தாக்கி இருக்கிறது.
இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்வது இது 9-வது முறையாகும். இதற்கு முன்பு 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.