தென்னாப்பிரிக்காவில் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் டி20 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருப்பார். ரோகித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 போட்டிகள் தொடரில் இடம்பெறும் இந்திய அணி வீரர்களின் பெயரையும் பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற டி20 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு ஹரித்க் பாண்டியா தலைமை வகித்தார். எனினும் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டி தொடரின் போது, அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா செல்லும் டி20 இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமைவகிக்கக் கூடும் என்று ஊகங்கள் வெளியாயின. ஆனால், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமை வகிப்பார் என்றும் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
முன்னதாக தென்னாப்பிரிக்க அணியிலிருந்து விடுவித்து தங்களுக்கு ஓய்வு அளிக்குமாறு ரோகித் மற்றும் விராட் கோலி இருவரும் பி.சி.சி.ஐ. யிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த 2022 ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்ற ரவீந்திர ஜடேஜா இப்போது டி20 அணிக்கு திரும்பியுள்ளார். அவர் துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை போட்டியில் முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் விளையாடவில்லை. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
தீபக் சாஹர், முகமது சிராஜ் மற்றும் சுப்மன் கில் ஆகியோரும் தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி விவரம்: ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வேட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்குசிங், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி விஷ்ணோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் தீபக் சாஹர்.