டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி, வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அடுத்த அணி யாரென்பதை எதிர்பார்த்துதான் ஒட்டுமொத்த உலகமும் காத்துக்கொண்டிருக்கிறது.
டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, லீக் சுற்று நடைபெற்று முடிந்தது, இதனையடுத்து 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறின. பின்னர் அந்த சூப்பர் 8 சுற்றிலிருந்து நான்கு அணிகள் தகுதிபெற்று அரையிறுதிக்கு முன்னேறின. இதனையடுத்து இன்று காலை முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது.
அதாவது தென் ஆப்பிரிக்கா அணிக்கும், ஆஃப்கானிஸ்தான் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது மேற்கிந்திய தீவுகளில் பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் (இந்திய நேரப்படி) இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் மட்டும் 10 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை கூட தாண்டவில்லை. இறுதியில் அந்த அணியானது 11.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் தப்பிரைஸ் சம்ஸி 3 விக்கெட்டுகளும், மார்கொ யான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குயிண்டன் டிகாக் 5 ரன்களில் வெளியேற மறுபுறம் எதிர்த்தாடிய ரிஷா ஹெண்ட்ரிக்ஸ் 29 ரன்களும் ஏய்டன் மார்க்ராம் 23 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்த அணியானது 8.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டுகள் இழந்து 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டி20 வரலாற்றிலேயே முதல்முறையாக இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து இன்று இரவு 8 மணிக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியே அடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.