இந்திய அணிக்கு உதவுவாரா கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்!

Batting Tips
Indian Team
Published on

இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிக்கத் திணறி வருகிறது. இதன் எதிரொலியாக தான் நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்தது. இந்நிலையில் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக உதவுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகின்ற நவம்பர் மாதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் 4 போட்டிகளை வென்றால் மட்டுமே, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறும். இந்நிலையில் பேட்டிங்கில் சொதப்பி வரும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலிய மைதானங்களில் எழுச்சி பெறுவார்களா அல்லது சொதப்புவார்களா என்பது கேள்விக்குறி தான். கடந்த இரு முறையும் ஆஸ்திரேலியாவில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றிருந்தாலும், இந்தமுறை வெல்வது சற்று கடினமாகத் தான் இருக்கும். ஏனெனில் ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த மண்ணில் தொடரை வெல்ல கடுமையாகப் போராடுவார்கள்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியை மறந்து விட்டு, புத்துணர்ச்சியுடன் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாட வேண்டும். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக உதவினால் நல்ல பலன் கிடைக்கும் என முன்னாள் தமிழக வீரர் டபிள்யு.வி. ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “ஆஸ்திரேலிய மைதானங்களில் நன்றாக பேட்டிங் செய்தவர் சச்சின் டெண்டுல்கர். ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6 சதங்களுடன் 1809 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் அங்கு இவருடைய பேட்டிங் சராசரி 53.20 ஆகும்.

1991 ஆம் ஆண்டு முதல் 2013 வரை வரையிலான காலகட்டத்தில் சச்சின் ஆஸ்திரேலியாவில் விளையாடியுள்ளார். டெஸ்டில் இவரது அதிகபட்ச ஸ்கோரான 241* ரன்களையும் 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மண்ணில் சச்சினின் ஆலோசனைகள், இந்திய பேட்டர்களுக்கு நிச்சயமாக உதவும்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
சச்சின் டெண்டுல்கரை 'சார்' என அழைக்கும் பாகிஸ்தான் வீரர் யார் தெரியுமா?
Batting Tips

சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் என இந்திய அணிக்கு எவ்வித பங்களிப்பையும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவர் இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக உதவுவாரா என்பது சந்தேகம் தான். மேலும் இதனை பிசிசிஐ கவனத்தில் கொள்ளுமா அல்லது கைவிடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் ரன் குவிக்காமல் திணறி வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலைத் தொடர்ந்தால், பார்டர் கவாஸ்கர் டிராபியையும் இந்தியா இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய பௌலர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் பேட்டர்கள் பங்களிப்பது மிகவும் முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com