

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு, அப்போதைய இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பெங்களூரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருந்தார். ஆனால் எந்த பத்திரிகையாளரும் வரவில்லை என்று அணி மேலாளர் கூறினார். அமைதியாக கண்ணியத்துடன், அவர் அறையை விட்டு வெளியேறினார்.
அதே நாளில், இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டு பத்திரிகையாளர்களும் மற்றொரு மண்டபத்தில் எம்.எஸ். தோனியின் உலகக் கோப்பைக்கு முன்பு பேட்டி எடுக்க குவிந்திருந்தனர்.
அச்சமயம், இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டின் யதார்த்தம் அதுவாகத்தான் இருந்தது. பெண்கள் கிரிக்கெட் புறக்கணிக்கப்பட்டு, கவனிக்கப்படாமல், விளையாட்டுப் பக்கங்களின் மூலைகளில் சிக்கிக் கொண்டது. துரதிருஷ்ட வசமாக, அந்த ஆண்டு மூன்று லீக் போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்து சீக்கிரமே தலை வணங்கியது. பெண்கள் அணி வெளியேறிய பிறகு மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முறை, ஒரு பத்திரிகையாளர் மட்டுமே வந்தார். வந்தவர் மிதாலியிடம், தனது கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன், பல செய்தியாளர்களிடம் பேசும் மாயையை உருவாக்க, மிதாலியின் முகத்தை இடது மற்றும் வலது பக்கம் திருப்பச் சொன்னார். மிதாலிக்கு அது சரியாகப் படவில்லை. அப்போது, மிதாலி அமைதியாக ஆனால் உறுதியாக, "சில ஆண்டுகளில் பெண்களின் பத்திரிகையாளர் சந்திப்புகளும் நிரம்பி வழியும் என்று நம்புகிறேன். பெண்கள் கிரிக்கெட் விளையாட்டுப் பக்கங்களின் ஒரு மூலையை ஆக்கிரமித்துள்ளதை நான் பார்த்து முடித்துவிட்டேன். அதை மாற்ற வேண்டியது பெண்கள் கிரிக்கெட் அணி பொறுப்பு" என்று கூறினார்.
பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. பெண்கள் கிரிக்கெட் அணி படிப்படியாக, கடினமாக உழைத்து பெயர் எடுத்தனர். சம ஊதியம் அறிவிக்கப்பட்டபோது இணையம் அவர்களைக் கேள்வி எழுப்பியது. அதை பெரிதாக அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இந்த உலகக் கோப்பையின் லீக் நிலைகள் வரை சமையலறை நகைச்சுவைகள் இருந்தன. ஆனாலும், அவர்கள் மனம் தளரவில்லை.
பதின்மூன்று ஆண்டுகளில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. மகளிர் பிரீமியர் லீக் தொடங்கியது, வீரர்கள் பிக் பாஷ் லீக்கில் வாய்ப்புகளைக் கண்டறிந்தனர், மிக முக்கியமாக, அவர்கள் அங்கீகாரத்தைப் பெற்றனர். இன்று, அரங்குகள் நிரம்பிய கூட்டம். அநேக பிரபல ஆண் கிரிக்கெட் வீரர்களாகிய ரோஹித் சர்மா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நீல நிறத்தில் உடையணிந்து விளையாடும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்துகிறார்கள்.
உலகக் கோப்பை இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்காக ஜோதியை முன்னெடுத்துச் செல்லும் பல மிதாலிகள், ஜெமிமாக்கள், ஷெஃபாலிஸ், ஸ்மிருதி மந்தனாஸ் மற்றும் பலர் உலகக் கோப்பையை வென்று, மகிழ்வுடன் கைகளில் ஏந்தி மலை போல் உயர்ந்து நின்று வரலாறு படைத்துள்ளது பாராட்டுக்குரிய செயலாகும். இன்று அனைத்து பத்திரிகையாளர்களும் தேனீக் கூட்டம் போல இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை சூழ்ந்து பேட்டி எடுக்கின்றனர்.
விடா முயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.