இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த கோரமான கார் விபத்தில் இருந்து மீண்டு வந்து, தற்போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்து வருகிறார். இந்த நீண்ட போராட்டமான மீட்சிப் பயணத்தில் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், தற்போது சில ஆண்டுகளுக்குப் பிறகு பண்ட் குறித்த ஒரு நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விபத்தில் பண்ட்டின் வலது முழங்காலில் கடுமையான தசைநார் கிழிந்திருந்தது. அவருக்கு விரிவான அறுவை சிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு தேவைப்பட்டது. விபத்துக்குப் பிறகு, அவரால் பல் துலக்கவோ, தன் கைகளை அசைக்கவோ கூட முடியவில்லை. அவை முற்றிலும் வீங்கியிருந்தன. படிப்படியாக, பண்ட் பிறரின் உதவியின்றி தண்ணீர் குடிக்கத் தொடங்கி, நான்கு மாதங்களுக்குப் பிறகு அவரால் ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடிந்தது.
ரிஷப் பண்ட்டுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தின்ஷா பர்திவாலா, டெலிகிராப் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "விபத்துக்குப் பிறகு ரிஷப் பண்ட் கண்விழித்ததும், அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, 'நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியுமா?' என்பதுதான்," எனத் தெரிவித்துள்ளார். பண்ட்டின் தாய், "அவரால் மீண்டும் நடக்க முடியுமா?" என்று கேட்ட வேளையில், கிரிக்கெட் மீதான அவரது அதீத காதலை இந்தக் கேள்வி வெளிப்படுத்தியதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷப் பண்ட்டின் மன உறுதி மற்றும் மீண்டு வரும் ஆர்வம் அபாரமானது என்று மருத்துவர் பாராட்டியுள்ளார். தான் ஒரு பயிற்சி பெற்ற ஜிம்னாஸ்ட் என்பதால், காயத்தில் இருந்து மீள்வது அவருக்கு ஓரளவுக்கு எளிதாக இருந்ததாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட சிகிச்சை மற்றும் கடினமான மறுவாழ்வு பயிற்சிகளுக்குப் பிறகு, பண்ட் ஐபிஎல் மற்றும் தற்போது டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். மருத்துவரின் இந்தத் தகவல், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பண்ட்டின் அசைக்க முடியாத தன்னம்பிக்கைக்கு ஒரு சான்றாகவும் அமைந்துள்ளது.