இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது என்பதே அரிதான விஷயம். அதிலும் ஒரே ஒரு ஐபிஎல் தொடரில் வெறும் 5 போட்டிகளில் மட்டும் விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. அத்தகைய அதிர்ஷ்டம் பெற்ற அந்த வீரர் யார் தெரியுமா? வாங்க இப்போதே தெரிந்து கொள்வோம்.
இந்திய அணி நடப்பாண்டு நடைபெற்ற 9வது டி20 உலகக்கோப்பையை ஒரு தோல்வி கூட பெறாமல் வென்றது. வெற்றிக்குப் பின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால் இளம் வீரர்களுக்கு டி20 அணியில் வாய்ப்புக்கான கதவுகள் திறந்தன. இந்நிலையில், இந்திய வங்கதேச அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று குவாலியரில் நடந்தது. இதில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி அதிவேகப் பந்து வீச்சாளர் எனப் பெயர் பெற்ற மயங்க் யாதவ், 21 வயதே நிரம்பிய நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு திறமை நிறைந்த வீரர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், இவரது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. அதற்கேற்ப இளம் வீரர்களின் தனித்திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் மயங்க் யாதவ். கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான எக்ஸ்பிரஸ் வீரர் தான் மயங்க் யாதவ்.
இவரை எக்ஸ்பிரஸ் என்று சொல்வதற்கு விஷேச காரணம் உண்டு. கடந்த ஐபிஎல் தொடரில் 150 கி.மீ வேகத்துக்கும் மேல் பந்து வீசி பலரது கவனத்தையும் ஈர்த்தவர். தான் பங்கேற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்ஸ்மேன்களை தனது வேகத்தால் கதிகலங்க வைத்தார். இதுமட்டுமின்றி குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காயத்தால் அடுத்தடுத்து தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. இவரது இந்த வேகம் தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.
இதற்கு முன்பு உம்ரான் மாலிக் என்ற இளம் புயல் அதிவேகப் பந்துகளை வீசினாலும், அதிகளவில் ரன்களை விட்டுக் கொடுத்ததால் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளத் தவறினார். ஆனால், மயங்க் யாதவ் வேகமாக பந்து வீசுவதோடு, ரன்களையும் கட்டுக்குள் வைத்து விக்கெட்டுகளை எடுப்பதால், இந்திய அணியில் நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதில் சிறப்பாக பந்து வீசிய மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். இதன்மூலம் சர்வதேச அரங்கில் ஒரு இமாலய சாதனையைச் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியில் முதல் ஓவரை மெயடனாக வீசிய மூன்றாவது இந்தியர் மயங்க் யாதவ் ஆவார். இதற்கு முன்பு அஜித் அகர்கர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்தச் சாதனையை செய்துள்ளனர். இப்போட்டியில் அதிகபட்சமாக 149.9 கி.மீ. வேகத்தில் மயங்க் யாதவ் பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.